Published : 29 Jul 2020 03:20 PM
Last Updated : 29 Jul 2020 03:20 PM
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க தமிழக எல்லை மாவட்டங்களில் எல்லை தொடங்கும் பகுதியிலேயே சோதனைச் சாவடி அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக தென்காசி மாவட்டம் கோட்டைவாசலில் தற்காலிக சோதனைச் சாவடி அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தென்காசி பரவன்பற்றுகளம் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகம்- கேரள எல்லையில் கேரள அரசின் சோதனைச் சாவடி எல்லை தொடங்கியதில் இருந்து 500 மீட்டர் தொலைவிலும், தமிழக அரசின் சோதனைஅ சாவடி எல்லையில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் புளியரையிலும் அமைந்துள்ளது.
புளியரையிலிருந்து தமிழக எல்லைக்குள் பரவன்பற்றுகளம், ஸ்ரீ முலப்பேரி நீர் தேக்கம், எஸ் வளைவு, கோட்டைவாசல் ஆகிய கிராமங்கள் உள்ளன.
கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் போது 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சோதனைச் சாவடி அமைந்திருப்பதால் கேரளாவில் இருந்து கோழி இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், பனைமர நுங்கு கழிவுகள், அழுகிய முட்டைகள், அழுகிய வாழை இலைகள், அழுகிய காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து கழிவுப் பொருட்களையும் சோதனை சாவடிக்கு முன்பு அமைந்திருக்கும் கிராமங்களில் கொட்டிச் செல்கின்றனர்.
இதனால் எங்கள் கிராமங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதைத் தடுக்க தமிழக சோதனைச் சாவடியை கோட்டைவாசல் பகுதிக்கு மாற்ற வேண்டும்.
இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் புளியரையில் செயல்பட்டு வரும் தமிழக சோதனைச் சாவடியை கோட்டைவாசல் பகுதிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், மாநில எல்லைப்பகுதியில் ஒன்று முதல் 6 கிலோமீட்டர் தொலைவில் சோதனைச் சாவடி அமைக்க வேண்டும் என விதியுள்ளது. அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மருத்துவக் கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் கேரளப் பகுதியிலிருந்து, தமிழக எல்லை கிராமங்களில் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும்.
தமிழக ம்- கேரளா எல்லையில் அமைந்திருக்கும் தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் எல்லை தொடங்கும் பகுதியிலேயே சோதனைச்சாவடி அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதற்கட்டமாக தென்காசி மாவட்டத்தில் கோட்டைவாசல் பகுதியில் உடனடியாக தற்காலிக சோதனைச் சாவடியை ஏன் அமைக்கக்கூடாது? இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பர் ஆகியோர் பதில்மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT