Published : 29 Jul 2020 02:19 PM
Last Updated : 29 Jul 2020 02:19 PM
உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இனிமேல் காவல் துறையின் செயல்பாடுகள் இருக்கும் என, சாத்தான்குளம் பொதுமக்களிடம் தூத்துக்குடி எஸ்.பி எஸ்.ஜெயக்குமார் உறுதியளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அந்தோணி மஹாலில் காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பேசியதாவது:
ஒரு மாதத்துக்குள் சாத்தான்குளம் நகர்ப் பகுதி முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். அவ்வாறு பொருத்துவதன் மூலம் குற்றங்கள் நடக்காது, நடந்த குற்றத்தை எளிதில் கண்டுபிடிக்கலாம். யாரும் பொய் சொல்ல முடியாது.
காவல்துறையினருக்கு, காவல்துறை பணியை விட மிக முக்கியமானது சமூகப் பணி. உதாரணமாக இது கரோனா தொற்று பரவல் காலமாக இருப்பதால் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களை, அணியுமாறு கூறி அவர்களுக்கு முகக்கவசம் வழங்குவது போன்று, அந்தந்த காலத்துக்கேற்ப பல்வேறு சமூகப் பணிகளை காவல் துறையினர் செய்ய வேண்டும்.
இவ்வாறு சமூகப் பணி செய்வதன் மூலம் பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடைவெளி வராமல் ஒரு சுமுகமான உறவு ஏற்படும். கண்டிப்பாக உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இனிமேல் சாத்தான்குளம் காவல்துறை செயல்பாடு இருக்கும்.
அதனால் உங்களுடைய பழைய ஒத்துழைப்பு எங்களுக்கு தேவை. இனிமேல் வரக்கூடிய அதிகாரிகள் உங்களுக்கு இணக்கமாகத்தான் இருப்பார்கள் என்றார் எஸ்.பி.
கூட்டத்தின் முடிவில் அனைவருக்கும் எஸ்பி கபசுரக் குடிநீர் வழங்கினார். கூட்டத்தில் சாத்தான்குளம் வர்த்தக சங்க தலைவர் துரைராஜ், வட்டார மனிதநேய நல்லிணக்க பெருமன்ற செயலாளார் மகா பால்துரை, தூத்துக்குடி மாவட்ட கேபிள் டி.வி ஆப்பரேட்டர்கள் சங்க நிர்வாகி கண்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆ.செ.ஜோசப் மற்றும் தச்சமொழி முன்னாள் தலைவர் ஆசிர் உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துகளை வழங்கினர்.
மேலும், சாத்தான்குளம் வர்த்தக சங்க நிர்வாகிகள், அரிமா சங்க நிர்வாகிகள், நகைத்தொழிலாளர் சங்க நிர்வாகிகள், அனைத்து கட்சி பிரதிநிதிகள், ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) நாகராஜன், காவல் ஆய்வாளர் பெர்னாட் சேவியர், உதவி ஆய்வாளர் முத்துமாரி மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT