Published : 01 Sep 2015 03:54 PM
Last Updated : 01 Sep 2015 03:54 PM
பாறு கழுகு எனப்படும் பிணந்தின்னிக் கழுகுகளின் அழிவில் பெரும் பங்கு வகிக்கும் டைக்ளோபீனாக் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பறவை நல ஆர்வலர்கள், ‘வீரியமிக்க இந்த மருந்துகள் இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை குறித்து மாவட்டம் தோறும் மருந்து ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளனர்.
விலங்கினங்களின் இறந்த உடல்களைத் தின்று சுற்றுச்சூழலுக்குக்கேடு ஏற்படாமல் தடுப்பதில் பாறு கழுகுகள் எனப்படும் பிணந்தின்னிக் கழுகுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் 9 வகை பிணந்தின்னிக் கழுகுகள் உள்ளன. அதில் தமிழகத்தில் வெண்முதுகு பாறு கழுகு, செந்தலைப் பாறு கழுகு, கருங்கழுத்து பாறு கழுகு, மஞ்சள் முகக் கழுகு என நான்கு வகை பாறு கழுகுகள் உள்ளன. தமிழகத்தில் முதுமலை, மாயாறு சமவெளி, சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இந்த கழுகு இனங்கள் உள்ளன.
கால்நடைகளுக்கு வீரியமிக்க ரசாயன மருந்துகள் கொடுப்பதால், அவற்றின் உடலைத் தின்று வாழும் பாறு கழுகுகளுக்கும் ரசாயன பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அவற்றின் பெருக்கமும், ஆயுளும் குறைந்து வருகிறது. இறந்த விலங்கினங்களின் உடல்களை தின்று, சூழல் மாசுபாட்டை தடுத்து வந்த இக்கழுகு இனங்களுக்கு ரசாயன கால்நடை மருந்துகள் அழிவுப்பாதையை ஏற்படுத்தியுள்ளன.
கால்நடைகளுக்கு மடிவீக்கம், சுளுக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்போது, வீரியமிக்க டைக்ளோபீனாக் உள்ளிட்ட ரசாயன மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயன மருந்துகளின் தாக்கத்தால், உயிரினங்களின் இறந்த உடல்களைத் தின்னும் பாறு கழுகுகளும் வெகுவாக பாதிக்கப்பட்டன. மறைமுகமாக இந்த மருந்துகள் கழுகுகளின் அழிவில் பெரும் பங்காற்றி வந்தன.
இந்நிலையில் நாடு முழுவதுமுள்ள பல்வேறு பறவை நல அமைப்புகளின் தொடர் வலியுறுத்தல் காரணமாக வீரியமிக்க ரசாயன மருந்துகளின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் அரசின் கட்டுப்பாடுகளின்படி ரசாயன மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டுமென பறவை நல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
கோவையில் உள்ள ‘அருளகம்’ பறவைகள் நல அமைப்பின் செயலாளர் பாரதிதாசன் கூறியதாவது: பாறு கழுகுகளின் அழிவுப் பாதைக்கு தள்ளிய டைக்குளோபினாக் மருந்து 2006-ல் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு கால்நடைகளுக்கு பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அந்த மருந்து மீண்டும் விற்பனைக்கு வந்தது.
வலி, சுளுக்கு உள்ளிட்ட பயன்பாட்டுக்கு 3 மி.லி. அளவு டைக்ளோபீனாக் மருந்து போதுமானது. ஆனால் பெரும்பாலும் 30 மி.லி. பாட்டில்களே பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இந்த மருந்து அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்ததால், கால்நடைகளின் இறந்த உடல்களை உண்டு வாழும் கழுகுகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தன.
பம்பாய் இயற்கைக் கழகம், ஆசியாவிலுள்ள பாறு கழுகுகளை அழிவிலிருந்து காக்கும் பன்னாட்டு அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புகள் இந்த மருந்துகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தின. இந்நிலையில் கடந்த மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 3 மி.லி.க்கு மேல் அளவுள்ள குப்பிகளில் டைக்ளோபீனாக் மருந்து விற்பதையும் உற்பத்தி செய்வதையும் தடை செய்துள்ளது.
ரசாயன மருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த மாவட்டம் தோறும் மருந்து ஆய்வாளர்கள் உடனடியாக சோதனை நடத்த வேண்டும். கீட்டோபுரோபேன், புளுனிக்சின், அசிக்குளோபினாக் போன்ற மருந்துகள் கழுகுகளின் எதிர்காலத்துக்கு ஆபத்தாக உள்ளன. இந்த மருந்துகளுக்கும் அரசு தடை விதிக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT