Published : 29 Jul 2020 10:04 AM
Last Updated : 29 Jul 2020 10:04 AM
வாணியம்பாடி அருகே நகைக்கடை உரிமையாளர், மெழுகினால் வரைந்த ஓவியத்தை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் நகைக் கடை உரிமையாளர் விஜயகுமார் (47). இவர், கடந்த 25 ஆண்டுகளாக வித்தியாசமான முறையில் பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகிறார். குறிப்பாக, மெழுகினால் விஜயகுமார் வரையும் ஓவியங்கள் காண்போரை மெய்சிலிர்க்க செய்கிறது.
தமிழகத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் நகைக் கடைகள் திறக்காமல் இருப்பதால், ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாக மாற்ற எண்ணிய விஜயகுமார், பல அற்புதமான மெழுகு ஓவியங்களை வரைந்துள்ளார். அந்த ஓவியங்களை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.
காகிதம் கொண்டு பென்சிலால் ஓவியத்தை வரையும் விஜயகுமார், அதன் பிறகு அதன்மேல் கண்ணாடியை வைத்து மெழுகை உருக்கி துளித்துளியாக அதன் மீது ஊற்றி ஊசி மற்றும் பிளேடு கொண்டு செதுக்கி அற்புதமான ஓவியங்களை வரைந்துள்ளார்.
வரலாற்று சிறப்பு மிக்க ஓவியங்கள் மட்டுமின்றி, கிருஷ்ணர்-ராதை, சிவன் - பார்வதி, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், குதிரைகள், கடல் உயிரினங்கள், உலகத் தலைவர்களின் உருவம் என பல்வேறு வகையான படங்களை மெழுகை உருக்கி, மிக தத்ரூபமாக வரைந்துள்ளார்.
இது குறித்து ஓவியர் விஜயகுமார் கூறும்போது, “நான் விலங்கியல் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். படிப்பு முடிந்தவுடன் ஓவியம் வரைவதற்கான சூழ்நிலை எனக்கு அமையவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறேன். இந்நிலையில், தற்போது ஊரடங்கு காலம் என்பதால், நகைக்கடைகள் திறக்க முடியவில்லை. இதனால், எனக்கு கிடைத்த இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்ற எண்ணினேன்.
இதைத்தொடர்ந்து, தற்போது மெழுகுவர்த்தியை உருக்கி, அதில் ஓவியங்களை வரைந்துள்ளேன். ஒவ்வொரு ஓவியங்களை வரைய எனக்கு பல மணி நேரம் ஆனது.
எனக்கு தெரிந்த இந்த கலையை, சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கற்றுத் தர விரும்புகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT