Published : 29 Jul 2020 08:08 AM
Last Updated : 29 Jul 2020 08:08 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இறப்பு விகிதம் 1.5 சதவீதமாக குறைந்துள்ளது: சுகாதாரத் துறை செயலர் தகவல்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கரோனா சிறப்பு வார்டை நேற்று தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உள்ளிட்டோர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டுகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, 26 நடமாடும் பரிசோதனை வாகனங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு ஏதுவாக கையடக்க கணினியை வழங்கினார்.

பின்னர், சுகாதாரத் துறைசெயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் பரி சோதனைகாரணமாக, பாதிப்பு ஆரம்பநிலையிலேயே கண்டறிந்துதேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் விளைவாக, ஜூலை முதல் வாரத்தில் 2.6 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம், 3-வது வாரத்தில் 1.5 சதவீதமாக குறைந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஜூலை 27-ம் தேதி வரை 90,556 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, 12,320 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரில் 8,108 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 54 தொழிற்சாலைகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 8,495 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் கரோனா தொற்று கண்டறியப்படும் நபர்களை தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு ஏதுவாக அரசு மருத்துவமனைகளில் 500 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 732 படுக்கைகளும், சுகாதார மையங்களில் 310 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x