Published : 29 Jul 2020 08:07 AM
Last Updated : 29 Jul 2020 08:07 AM

கரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருக்காமல் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை

கரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருக்காமல் மூச்சுத்திணறல் இருக்கும் நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் கரோனா வைரஸ்தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இயக்கப்படும் அதிநவீன மின்னணு வீடியோ விழிப்புணர்வு வாகனங்களை, ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் ஜூன் 19-ம்தேதி முதல் ஜூலை 5-ம்தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தியதும், பரிசோதனையை அதிகப்படுத்தியதும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஜூன் 19-ம் தேதிக்குமுன்பு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதல்வரின் உத்தரவின்பேரில் தற்போது நாள்தோறும் 12 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. தொற்று உறுதிசெய்யப்படுவது 37 சதவீதத்தில் இருந்து 9.5 சதவீதம் முதல்11 சதவீதமாக குறைந்துள்ளது.

மூச்சுத் திணறல் இருக்கும் நபர்களை பரிசோதனை முடிவு வரும் வரை காத்திருக்காமல் மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதிக்க தொடங்கியுள்ளோம். இது இறப்பு விகிதத்தை குறைக்க உதவும் என்று நம்புகிறாம். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மண்டலத்துக்கு ஒருவாகனம் என 15 அதிநவீனமின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு கோ.பிரகாஷ் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு பயண அனுமதிச் சீட்டு வழங்கியது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு விட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு,“பயண அனுமதிச் சீட்டைபொறுத்தவரை எந்த மாவட்டத்துக்கு சென்றடைகிறோமோ அந்த மாவட்டத்தின் அலுவலர்கள்தான் கொடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை பொறுத்தவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்துதான் பயண அனுமதிச் சீட்டு வழங்கியுள்ளனர். அந்த அனுமதி சீட்டைபயன்படுத்தித்தான் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது” என்று கோ.பிரகாஷ் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x