Published : 28 Jul 2020 08:08 PM
Last Updated : 28 Jul 2020 08:08 PM
நாகர்கோவிலில் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன். 2011 முதல் 2016 வரை எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவர் இதே தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கட்சியின் பல மாநில பொறுப்புகளையும் வகுத்து வந்த அவர், ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் டிடிவி தினகரன் அணியில் சேர்ந்தார். பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்திருந்தார்.
நேற்று முன்தினம் இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நாகர்கோவில் கோட்டாறை சேர்ந்த 15 வயதான 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நாஞ்சில் முருகேசன் மீது நேற்று நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவியின் தந்தை அளித்த புகாரில் மகளை அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்திச் சென்று விட்டதாகக் கூறியிருந்தார். போலீஸார வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மாணவியையும், அவரை அழைத்து சென்ற வாலிபரையும் மீட்டனர்.
மாணவியிடம் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுடன் நடத்திய விசாரணையில். தன்னைக் கடந்த 4 ஆண்டுகளாக முக்கிய பிரமுகர்களுடன் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாகவும், இதற்கு உறவினர்களே உடந்தையாக இருந்ததாகவும் மாணவி தெரிவித்தார்.
மேலும் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரின் பெயரைக் கூறி, தன்னை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், கடந்த 2017ம் ஆண்டு தனது தாயார் நாஞ்சில் முருகேசனிடம் அழைத்து சென்றபோது அவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் மாணவி கூறியுள்ளார்.
மாணவியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் நாகர்கோவில் அனைத்து மகளில் போலீஸார் நாஞ்சில் முருகேசன் மீது நேற்று போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தவிர சிறுமியிடம் போலீஸார் ரகசிய வாக்குமூலம் பெற்றனர். நாஞ்சில் முருகேசன் தவிர முதியவர், ஆட்டோ ஓட்டுனர் என மேலும் 3 பேர் தன்னை பல நாட்களாக மிரட்டி பாலியல் கொடுமைக்கு ஈடுபடுத்தியதாகவும் கூறியுள்ளார்.
பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
மாணவி பாலியல் கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும் பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாணவியிடம் நடத்திய தொடர் விசாரணையில் தன்னை பாலியல் தொல்லை செய்தவர்களின் அடையாளங்களையும், வீட்டையும் அடையாளம் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாலியல் புகாருக்குள்ளான நாஞ்சில் முருகேசன் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
நாகர்கோவில் புத்தேரியில் உள்ள நாஞ்சில் முருகேசனின் வீட்டை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சிறுமி பாலியல் புகாரின் அடிப்படையிலே நாஞ்சில் முருகேசனை நேற்று முன்தினம் கட்சியில் இருந்து நீக்கி தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதிமுகவில் சாதாரண நிலையில் இருந்த இவர் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பல கோடிகளுக்கு அதிபதியானார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் குமரி மாவட்டத்தில் முக்கிய பொறுப்புகளை வகுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் மீது பாலியல் புகாரில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறுமி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT