Published : 28 Jul 2020 08:08 PM
Last Updated : 28 Jul 2020 08:08 PM
அமைப்புசாரா தொழிலாளர்களுக்காகத் தமிழக முதல்வர் அறிவித்த கரோனா கால நிவாரணத் தொகை இன்னும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, நிவாரணத் தொகையை அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வழங்க வலியுறுத்தி, வீடு திரும்பாப் போராட்டம் நடத்த அனைத்துக் கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா உடல் உழைப்புத் தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் இன்று பாப்பநாயக்கன் பாளையம் ஏஐடியுசி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஏஐடியுசி சங்க பொதுச் செயலாளர் என்.செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் அண்ணா தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.முருககேசன், தொமுச பொதுச்செயலாளர் வே.கிருஷ்ணசாமி, கோயமுத்தூர் லேபர் யூனியன் பொதுச்செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், ஐஎன்டியுசி சங்க பொதுச்செயலாளர் சிரஞ்சீவி கண்ணன், எச்எம்எஸ் சங்க பொதுச்செயலாளர் ஜி.மனோகரன், சிஐடியு சங்கப் பொதுச்செயலாளர் ஆர்.பழனிசாமி, பிஎம்எஸ் சங்கப் பொதுச் செயலாளர் பி.முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் கூட்டுக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மார்ச் 27-ம் தேதி, கட்டிடம் மற்றும் அமைப்புசாரா உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, கரோனா ஊரடங்கு கால வேலையில்லா நிவாரணம் தலா ஆயிரம் ரூபாயும், இரண்டாவது கட்டமாகத் தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அரசு அறிவித்த இரண்டாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையானது கோவை மாவட்டத்தில் இன்னும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நான்கு மாதங்கள் கடந்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக இதுவரை பல இடங்களுக்கு, பலமுறை அலைந்து கேட்டும் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் வாரியத்தில் பதிவு பெற்றுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் முதல்வர் அறிவித்த கரோனா கால நிவாரண நிதியைக் கொடுத்து முடிக்கவேண்டும். மேலும், ஆன்லைனில் பதிவுசெய்ய விண்ணப்பங்களில் மாற்றம் செய்யக்கூடாது. கிராம நிர்வாக அலுவலர்களுக்குப் பதிவுச் சான்று வழங்குவது குறித்து வழிகாட்டவேண்டும். இணையத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது. உறுப்பினர் அட்டைகளைப் பதிவு செய்துள்ள சங்கங்களிடம் வழங்கவேண்டும்.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி நிவாரணம் கிடைக்காத தொழிலாளர்களுடன் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் இணைந்து நலவாரியத்திற்கு வந்து நிவாரணம் கிடைக்கும் வரை வீடு திரும்பாப் போராட்டம் நடத்துவது என இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது''.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT