Published : 28 Jul 2020 07:43 PM
Last Updated : 28 Jul 2020 07:43 PM
கரோனா காலத்திலும் ஒரு பைசா கூட குறைவில்லாமல் சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் தன் நலன், குடும்ப நலனை மட்டும் பார்க்காமல், சமூக நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராதானூரைச் சேந்தவர் வாசு. இவர் ராதனூர் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
பின்னர் சில குற்றச்சாட்டு அடிப்படையில் ராதானூரில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவில் இதே ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓடைக்கல் கிராம உதவியாளராக இடமாறுதல் செய்யப்பட்டார்.
இதை ரத்து செய்து தன்னை மீண்டும் ராதானூர் கிராம உதவியாளராக நியமிக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் வாசு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் ஓடைக்கல் கிராமத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் ஜாதியினர் தன்னை மிரட்டுவதாக மட்டும் தெரிவித்துள்ளார். இந்த காரணத்தை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் எந்த கிராமத்திலும் மாற்று சாதியினர் பணிபுரிய முடியாது.
அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் நான் (நீதிபதி) உட்பட அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளம் மற்றும் சலுகையில் கரோனா காலத்தில் ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை.
ஆனால் தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் வருவாய் இழப்பை சந்தித்து வாழ்க்கை நடத்த போராடி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் அரசு ஊழியர்கள் அனைத்திலும் முன்களப்பணியாளராக இருந்து உழைக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள் தான், தன் குடும்பம் மற்றும் உறவினர்களின் நலனை பற்றி மட்டும் சிந்திக்காமல், சமூக நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT