Published : 28 Jul 2020 06:34 PM
Last Updated : 28 Jul 2020 06:34 PM
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 4 சடலங்களை வாங்க மறுத்து உறவினர்கள் திரண்டதால் இன்று பரபரப்பு நிலவியது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்ட விவசாயி மதியழகன் (52) என்பவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை கூடம் அருகே போராட்டம் நடத்தினர்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்த சண்முகம் (40) என்பவர் விபத்தில் சிக்கியதாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
போலீஸார் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறி அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து (65) வனத்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
அணைக்கரை முத்துவின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது சடலத்தை வாங்க மறுத்து கடந்த 23-ம் தேதி முதல் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கூடங்குளம் அணுமின் நிலைய கடற்பகுதியில் அளவீடு பணிகளின் போது உயிரிழந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தருண் சர்மா என்பவரது சடலமும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ளது.
தருண் சர்மா குடும்பத்தினருக்கும் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்தனர்.
ஒரே நேரத்தில் 4 சடலங்களை வாங்க மறுத்து உறவினர்களும், மற்றவர்களும் மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் அங்கு இன்று பரபரப்பு நிலவியது. ஏராளமான போலீஸார் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT