Last Updated : 28 Jul, 2020 06:39 PM

 

Published : 28 Jul 2020 06:39 PM
Last Updated : 28 Jul 2020 06:39 PM

பொங்குகிறது பால் உற்பத்தி; மங்குகிறது விற்பனை!- விற்றுக் காசாக்க முடியாமல் பால் உற்பத்தியாளர்கள் அவதி

பார்த்திபன்.

மதுரை

மழை காரணமாகப் புற்கள் செழித்து வளர்ந்திருப்பதால், தமிழகத்தில் பால் உற்பத்தி அதிகரித்திருக்கிறது. ஆனால் பொதுமுடக்கம் காரணமாக, பால் தேவை குறைந்திருப்பதால் உரிய விலை கிடைக்காமல் பால் உற்பத்தியாளர்கள் அவதிப்படுகிறார்கள்.

தமிழகமானது நாளொன்றுக்கு சுமார் 206 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யும் முன்னோடி மாநிலம். இதில் 25 லட்சம் லிட்டர் பால், மாடு வளர்ப்போரின் சொந்தப் பயன்பாட்டிற்கும், 105 லட்சம் லிட்டர் பால் அண்டை வீட்டார் மற்றும் சிறு வியாபாரிகளுக்கும் செல்கிறது. எஞ்சிய 76 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கூட்டுறவு மற்றும் தனியார் பால் பண்ணைகள் மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன.

பொதுவாக கோடைக் காலத்தில் தீவனப் பற்றாக்குறை காரணமாக பால் உற்பத்தியும் குறையும். இந்த ஆண்டு கோடைக்காலம் முடியும் முன்பாகவே அடிக்கடி மழை பெய்ததால், மாடுகளுக்குப் பசுந்தீவனம் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கியது. இதன் காரணமாக, பால் உற்பத்தி மிகவும் அதிகரித்துள்ளது. ஆனால், கூட்டுறவு மற்றும் தனியார் பால் பண்ணையில் பால் கொள்முதலை அதிகரிக்கவில்லை. இதனால் கூடுதல் பாலை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் பால் உற்பத்தியாளர்கள்.

இதுகுறித்து மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர் பார்த்திபன் கூறுகையில், "அலங்காநல்லூரில் ஆவின் நிறுவனத்தினர் ஒரு லிட்டர் பாலை 30 ரூபாய்க்கும், தனியார் நிறுவனத்தினர் 32 ரூபாய்க்கும் கொள்முதல் செய்வது வழக்கம். தற்போது பால் உற்பத்தி உயர்ந்துள்ளதால், வழக்கமாக 25 லிட்டர் பால் ஊற்றும் விவசாயி, இப்போது 30 முதல் 32 லிட்டர் வரையில் ஊற்றுகிறார். பாலின் தரமும் உயர்ந்திருக்கிறது.

ஆனால், அவர்களோ வழக்கமாக வாங்கும் பாலுக்கு மேல் ஒரு சொட்டுகூடக் கூடுதலாக வாங்க மாட்டோம் என்கிறார்கள். 'டீக்கடைகள், உணவகங்கள் செயல்படாததால் பாலின் தேவை குறைந்துவிட்டது' என்றும், 'திடீரெனக் கொள்முதலை நிறுத்தக்கூடாது என்று தேவையில்லாவிட்டாலும் பாலை வாங்கிக் கொண்டிருக்கிறோம்' என்றும் அவர்கள் கூறிவிடுகிறார்கள்.

நான் 30 லிட்டர் பால் உற்பத்தி செய்யும் விவசாயி என்றாலும்கூட, அதில் பெரும்பாலானவற்றை நேரடியாக நுகர்வோருக்கே விற்பனை செய்து வருகிறேன். எனவே, எனக்குப் பெரிதாக நஷ்டமில்லை. மற்ற விவசாயிகள் எல்லாம் கூடுதல் பாலை என்ன செய்வது என்று தெரியாமல், தெருத்தெருவாகக் கூவிக்கூவி விற்கிறார்கள். அந்தப் பால் லிட்டர் 25 முதல் 30 ரூபாய்க்குக்கூடப் போவதில்லை. ஒரு லிட்டர் தண்ணீரே 20 ரூபாய்க்கு விற்கப்படுகிற சூழலில், பாலை 25 ரூபாய்க்கு விற்பது விவசாயிகளுக்குக் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, வழக்கமாகப் பால் வாங்குவோரிடம் காசே வாங்காமல் கூடுதலாக 200, 300 மில்லி என்று இலவசமாகவே ஊற்றுகிறார்கள். கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதலை அதிகரிப்பதும், பொதுமுடக்கம் முழுமையாகத் தளர்த்தப்படுவதும்தான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு" என்றார்.

இதுபற்றி மதுரை மாவட்ட ஆவின் சேர்மன் தமிழரசனிடம் கேட்டபோது, "தேவை குறைந்திருந்தாலும் கூட, ஆவினில் பதிவு செய்த விவசாயிகளிடம் நாங்கள் வழக்கம்போல பால் கொள்முதல் செய்கிறோம். மிஞ்சுகிற பாலைப் பவுடராக்குகிறோம். இருந்தாலும் பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x