Published : 28 Jul 2020 06:07 PM
Last Updated : 28 Jul 2020 06:07 PM

தியேட்டர்களைத் திறக்க அனுமதியுங்கள்; கேளிக்கை வரியை நீக்குங்கள்: அமைச்சரிடம் திரையுலகினர் வேண்டுகோள்

சென்னை

பாரதிராஜா தலைமையில் திரையுலகினர் அமைச்சர் கடம்பூர் ராஜூவைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். தியேட்டர்களைத் திறக்க வேண்டும், படப்பிடிப்புக்கு அனுமதி, திரைத்துறை மீதான வரியை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

''சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (28.7.2020) செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை, தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் அதன் தலைவரும், திரைப்பட இயக்குநருமான பாரதிராஜா தலைமையில் நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்து, தங்களது கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கனிவான கவனத்திற்குக் கொண்டு சென்று நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார்கள்.

தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் தங்களது மனுவில், திரைப்படப் படப்பிடிப்பு நடத்துவதற்கும், திரையரங்குகளை திறப்பதற்கும் அனுமதி வழங்க வேண்டும் எனவும், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து திரையரங்கங்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும் டிக்கெட் விலையைக் குறைக்க வேண்டியுள்ளதால் சினிமாத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள 8 சதவிகித local body entertainment tax-ஐ முழுவதுமாக நீக்க வேண்டும்.

தனியாக உள்ள சிறிய திரையரங்குகளை மினி ப்ளக்ஸ் (அ) மல்டி ப்ளக்ஸாக மாற்றுவதற்கு பெறப்படும் அனுமதியினை எளிதாக்க வேண்டும் எனவும், திரையரங்குகளில் தற்பொழுது டிஜிட்டல் முறையில் திரைப்படங்கள் திரையிடப்படுவதால், Projector Operator-க்கு வேலை இல்லாத சூழ்நிலையில் திரையரங்குகளில் Projector Operator Licence பெற வேண்டும் என்ற முறையை முற்றிலும் நீக்க வேண்டும்.

பொதுப்பணித் துறையிடமிருந்து ஒவ்வொரு வருடமும் C-form licence-ஐ புதுப்பிக்க வேண்டும் என்ற முறையிலிருந்து மூன்று வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்கள்.

செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகளிடம் அவர்களது கோரிக்கைகளைச் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களோடு, முதல்வரின் கவனத்திற்கும் எடுத்துச் சென்று ஆவன செய்வதாகத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் கே.ஆர்., டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, ஜி.தனஞ்செயன், கே.ராஜன், சுரேஷ் காமாட்சி மற்றும் லலித் குமார் ஆகியோர் உடனிருந்தனர்”.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x