Published : 28 Jul 2020 05:44 PM
Last Updated : 28 Jul 2020 05:44 PM
மத்திய அரசு இனியும் தாமதம் செய்யாமல் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும். கமிட்டி முடிவு செய்ய மூன்று மாதம் தேவையில்லை. மத்திய அரசு மனது வைத்தால், ஒரே வாரத்தில் முடிக்கலாம். மருத்துவக் கல்விக்கான மத்தியத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு உடனே இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:
“மருத்துவக் கல்வியில், மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் எம்பிபிஎஸ் போன்ற பட்டப் படிப்புகளுக்கு 15 சதவிகித இடங்களும், மருத்துவ மேல்பட்டப் படிப்பிற்கு (எம்.டி., எம்.எஸ். போன்றவை) 50 சதவிகித இடங்களும் அளிக்கும் திட்டத்தில், ஏற்கெனவே உள்ள மாநில சட்டப்படியும், ‘நீட்’ தேர்வினை நடத்தும் மெடிக்கல் கவுன்சில் தனது ஒழுங்குமுறை ஆணை அடிப்படையிலும், தரவேண்டிய இட ஒதுக்கீட்டை கடந்த பல ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டடோருக்குத் தராமலே ‘நீட்’ ஆரம்பித்த கடந்த மூன்று ஆண்டுகளாக ஓபிசி என்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பூஜ்ஜிய இட ஒதுக்கீடே என்ற நிலையை எதிர்த்து நமது இயக்கமும் ‘விடுதலை’யும் இதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது.
இது சட்டப்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருக்கும் உரிமை - அரசமைப்புச் சட்டப்படியும்கூட என்பதைச் சுட்டிக்காட்டி, சமூக நீதி மண்ணான தமிழ்நாடு இதற்கான சட்டப் போராட்டக் களத்தில் (முதற்கட்டமாக) இறங்கி நீதி கேட்கவேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் கேட்டுக் கொண்டதை ஏற்றுக்கொண்டனர். திக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ‘ரிட்’ (Writ of Mandamus) வழக்கும் தொடுத்தோம்.
திமுக, உச்ச நீதிமன்றத்தில் முன்னோடியாகச் சென்று வழக்குத் தொடர்ந்தது, அதனையொட்டி மற்ற அரசியல் கட்சிகளான மதிமுக, தமிழ்நாடு காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக ஆகியவற்றோடு தமிழ்நாடு அரசும் சமூக நீதி கேட்டு வழக்குத் தொடர்ந்தன.
உச்ச நீதிமன்றத்தில் அந்தக் கட்டத்தில் இதனை ஏற்க மறுத்து, உயர் நீதிமன்றத்திற்கே நீங்கள் செல்லுங்கள் என்று கூறி, மனுக்களை ‘டிஸ்மிஸ்’ செய்ய ஆயத்தமான நிலையில், அனைவரும் மனுக்களைத் திரும்பப் பெற்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்து, மூத்த வழக்குரைஞர்களும், அரசின் தலைமை வழக்குரைஞரும் சிறப்பாக வாதாடினர். எதிர்வாதங்களை வைத்தனர்.
மத்திய அரசின் சுகாதாரத்துறை, மெடிக்கல் கவுன்சில் சார்பாக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய முடியாது என்றும், 50 விழுக்காட்டிற்கு மேலே செல்வதால் செயல்படுத்த முடியாது என்றும், உச்ச நீதிமன்றம்தான் இது சம்பந்தமாக முடிவு செய்யும் அதிகாரம் படைத்தது என்றும், உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே சலோனிகுமாரி வழக்கு என்ற பிற்படுத்தப்பட்டவரின் வழக்கு விசாரணையில் இருப்பதால், அதன் முடிவுக்குப் பிறகே இதுபற்றி எந்த முடிவையும் எடுக்க முடியும் என்றும் பல எதிர்வாதங்களை வைத்தனர்.
உயர் நீதிமன்றத்தின் விசாரணையைத் தடுக்கும் வகையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், உயர் நீதிமன்றத்தில் விசாரித்துத் தீர்ப்பளிக்கக் கூடாது என்பதாகவும் மத்திய அரசு துறைகள் சார்பாக, மெடிக்கல் கவுன்சில் சார்பாக வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.
உடனே திமுக சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் ஆர்.வில்சன், உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே இது சம்பந்தமாக மாணவர் ஒருவர் சார்பாக போட்டிருந்த வழக்கு விசாரணையில், இதைக் கூறியவுடன், ‘‘உயர் நீதிமன்றம் அந்த வழக்குகளைத் தொடர்ந்து விசாரிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை’’ என்று தெளிவுபடுத்திய நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் ஏ.பி.சாஹி, ஜஸ்டீஸ் செந்தில்குமார், ஜஸ்டீஸ் ராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு இந்த இட ஒதுக்கீட்டு வழக்கினை விசாரணைக்கு எடுத்து, தொடர்ந்து பல மணிநேர வாதங்களை அனுமதித்துக் கேட்டு, காலம் தாழ்த்தாமல், 27 ஆம் தேதி தீர்ப்பு என்றும் அறிவித்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
நேற்று (27.7.2020) தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வின் தீர்ப்பு வெளிவந்தது. 171 பக்கங்கள் கொண்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், மத்திய அரசின் சுகாதாரத்துறை, இந்திய மெடிக்கல் கவுன்சில் சார்பாக தெரிவித்த எதிர்தரப்பு வாதங்களை இந்நீதிமன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது.
ஏற்கெனவே மாநில அரசின் 69 சதவிகித சட்டம் அமலில் இருப்பதால் ஓபிசி என்ற பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையைப் புறந்தள்ள முடியாது என்றும், உச்ச நீதிமன்றம்தான் இட ஒதுக்கீடு சம்பந்தமாக முடிவு செய்ய முடியும் என்ற மத்திய அரசு துறைகளின் வாதங்கள் ஏற்கத்தக்கன அல்ல என்றும், ஏற்கெனவே ‘நீட்’ தேர்வில், இட ஒதுக்கீடு - மெடிக்கல் கவுன்சில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அபயநாத் வழக்கு போன்றவற்றிலும், ராஜேஸ்வரன், ஜெயக்குமார் வழக்குகளிலும், அபயநாத் வழக்குகளிலும் முன்பு அளித்துள்ளதைச் சுட்டிக் காட்டியும், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தர அரசமைப்புச் சட்டப்படியும் எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பு கூறினர்- இது வரவேற்கத்தக்க தீர்ப்பாகும்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்னொரு முக்கியக் கருத்தைத் தெளிவுபடுத்தி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை மறுக்கப்பட முடியாத ஒன்று என்று திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டிருக்கிறது.
இது சம்பந்தமாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பல வந்துள்ளன. பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு முறையே 15 விழுக்காடு, 7.5 விழுக்காடு, உயர் சாதியினரில் ஏழைகளுக்கு (EWS) 10 விழுக்காடு, மாற்றுத் திறனாளிகளுக்கும் இட ஒதுக்கீடு என்று வரும் போது மொத்தக் கூட்டலில், 50 விழுக்காட்டுக்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்பது - இனி எடுபடக் கூடிய வாதமாகாது என்பது தெளிவாகிவிட்டது.
இத்தீர்ப்பின்படி, மத்திய அரசு, மூன்று மாதத்திற்குள் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது சம்பந்தமாக ஒரு கமிட்டி அமைத்து முடிவு செய்ய வேண்டும் என்பதும், இவ்வாண்டு இதன் பலன் கிடைக்காது என்பதும்கூட இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சமூக நீதியை நடைமுறைப்படுத்த மத்திய அரசு மனம் வைத்தால், ஒரு வாரத்திற்குள் செய்ய முடியும் என்பதை 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் வரலாறே நன்கு உணர்த்தும். எனவே, காலதாமதம் செய்யாமல், அரசமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளைப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்க முன்வரவேண்டும்!
சென்னை உயர் நீதிமன்றம், அதன் முதல் அமர்வில் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க, சமூக நீதியின் மைல்கல் போன்ற இந்தத் தீர்ப்பு அந்நீதிபதிகளின் ஆழ்ந்த சட்டப் புலமைக்கும், சமூக நீதியின்பால் உள்ள நியாயங்களின் நேர்மையையும் சட்டப்படி விளக்கியிருக்கிறது. இத்தீர்ப்பைப் பாராட்டி வரவேற்கிறோம்.
இனி, பந்து மத்திய அரசிடம்தான் இருக்கிறது.
காலந்தாழ்த்தாமல் - மீண்டும் பிற்படுத்தப்பட்டோருக்கு, ஒடுக்கப்பட்டோருக்கு உரிய நீதி - சமூக நீதி கிடைக்கச் செய்ய உடனடியாக செயல் வடிவம் கொடுக்கவேண்டும். உயர் நீதிமன்றம் கொடுத்த மூன்று மாத அவகாசம் என்பது உச்ச வரம்புதானே தவிர, அதற்குள் வினையாற்ற எந்தத் தடையுமில்லை என்பதையும் புரிந்துகொண்டு, மத்திய அரசு செயல்படுவதே உண்மையான மக்களாட்சிக்கு சரியான அடையாளம் ஆகும்”.
இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT