தடையை மீறி கொடைக்கானலுக்கு சுற்றுலா: நடிகர்கள் விமல், சூரி மீது வழக்குப்பதிவு
கொடைக்கானலுக்கு சுற்றுலாசெல்ல தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறியும் இ பாஸ் இல்லாமலும் கொடைக்கானல் சென்றுவந்த நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் மீது கொடைக்கானல் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் யாரும் செல்லக்கூடாது என தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்த தடை இன்றளவும் தொடர்கிறது.
இந்நிலையில் கடந்த ஜூலை 17-ம் தேதி நடிர்கள் விமல், சூரி மற்றும் திரைத்துறையை சார்ந்த சிலர், சென்னையில் இருந்து கொடைக்கானல் வந்து நான்கு நாட்கள் தனியார் பங்களாவில் தங்கிச்சென்றது தெரியவந்தது.
கொடைக்கானலில் தங்கியிருந்தபோது வனத்துறை தடைசெய்யப்பட்ட பகுதியான பேரிஜம் ஏரிக்குச் சென்று மீன் பிடித்துள்ளனர். இதுகுறித்த தகவல் வெளியானவுடன் அனுமதியின்றி கொடைக்கானல் வந்துசென்ற நடிகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உள்ளூர் மக்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர்.
இந்நிலையில் முதற்கட்டமாக வனத்துறையினர், தடைசெய்யப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரிக்கு சென்று மீன்பிடித்ததற்காக நடிகர்கள் இருவருக்கும் தலா ரூ.2000 அபராதம் விதித்தனர். மேலும் நடிகர்களுக்கு உடந்தையாக இருந்த வேட்டைத்தடுப்புகாவலர்கள் 3 பேரை பணியிடைநீக்கம் செய்தனர். நடிகர்களை நடவடிக்கைகளை கண்காணிக்காத வனத்துறை ஊழியர்கள் 3 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து நடிகர்கள் இ பாஸ் எடுத்து கொடைக்கானல் வந்தனரா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் இ பாஸ் எடுக்காமல் கொடைக்கானல் வந்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவக்குமார், கொடைக்கானல் போலீஸில் புகார்செய்தார். இதையடுத்து ஊரடங்கு சட்டத்தை மீறியது, நோய்த் தொற்று பரவகாரணமாக இருந்தது என இரு பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதற்கட்டமாக நடிகர்கள் தங்குவதற்கு உதவிய உள்ளூர் பிரமுகர்கள் யார் என போலீஸார் விசாரணையைத் தொடக்கியுள்ளனர். தொடர்ந்து நடிகர்கள் விமல், சூரி ஆகியோரையும் விசாரிக்க உள்ளனர்.
இந்த வழக்கில் நடிகர்களுக்கு உதவிய உள்ளூர் பிரமுகர்கள், சோதனைச்சாவடிகளை கடந்துவர உதவியவர்கள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.
