Last Updated : 28 Jul, 2020 09:41 AM

 

Published : 28 Jul 2020 09:41 AM
Last Updated : 28 Jul 2020 09:41 AM

தமிழக சிங்கிரி கோயிலுக்குச் சொந்தமான புதுச்சேரியிலுள்ள நிலங்களை அபகரிக்க முயற்சி என புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர், ஆளுநருக்கு மனு

சிங்கிரி கோயில்: கோப்புப்படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் உள்ள தமிழக சிங்கிரி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அபகரிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர், புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் ஸ்ரீதர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகன்நாதன் உட்பட 12 சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (ஜூலை 28) அனுப்பியுள்ள மனு விவரம் தொடர்பாக அவர்கள் கூறியதாவது:

"கடலூர் மாவட்டம் சிங்கிரிகோயில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், அசையும், அசையா சொத்துக்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் உள்ளன.

இக்கோயிலின் நிலங்கள் மற்றும் சொத்துக்களின் மூலம் ஈட்டும் வருவாயைக் கொண்டுதான் அன்றாட வழிபாடுகளும், அனைத்து விழாக்களும் ஆண்டாண்டுக் காலமாக நடைபெற்று வருகின்றன.

இக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துக்கள் சில புதுச்சேரியில் உள்ள பல்வேறு கிராமங்களில் குத்தகைக்கும், வாடகைக்கும் விடப்பட்டுள்ளன. அவ்வாறு விடப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் சொத்துக்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு உடையவையாகும்.

இக்கோயில் சொத்துக்களைப் புதுச்சேரி ஆட்சி அதிகாரத்தில் உள்ள சில அரசியல்வாதிகளும் இடைத்தரகர்களும் இந்து சமய அறநிலையத்துறையின் ஊழல் அதிகாரிகளைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக அபகரிக்க முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எனவே, புதுச்சேரி பகுதியில் உள்ள சிங்கிரி கோயில் லட்சுமிநரசிம்மர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துக்களைச் சட்ட விரோதமாகக விற்கத் துடிக்கும் கிரிமினல் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இக்கோயில் நிலங்கள் மற்றும் சொத்துகளை இந்து சமய நிறுவனங்கள் சட்டங்களின்படியும் அதன் கீழ் இயற்றப்பட்ட விதிகளின்படியும் பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இதுகுறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடலூர் மாவட்ட ஆட்சியர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்குப் புகார் அனுப்பி உள்ளோம்"

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x