Published : 28 Jul 2020 08:09 AM
Last Updated : 28 Jul 2020 08:09 AM
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக குறித்த நேரத்தில்(ஜூன் 12) மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு இலக்கை விஞ்சி குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி அதிக அளவில் நடைபெறுவது வழக்கம். இது,ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், அணை திறப்பு தாமதமானது. இதனால் இம்மாவட்டங்களில் குறுவை சாகுபடி சொற்ப அளவிலேயே நடைபெற்றது.
கடைமடை வரை தண்ணீர்
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதும் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதன் காரணமாக கடைமடை வரை தண்ணீர் சென்றுசேர்ந்தது. மேலும், டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களில் விட்டுவிட்டு பெய்த மழையும் விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்தது.
இதனால், குறுவை சாகுபடிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 43,825 ஹெக்டேரில் இதுவரை 43,500 ஹெக்டேரில் நடவுப் பணி நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்துக்கான இலக்கு 33,300 ஹெக்டேர். இதில் இதுவரை 34 ஆயிரம் ஹெக்டேரில் நடவுப் பணிகள் முடிந்துள்ளன. நாகை மாவட்டத்தைப் பொறுத்தவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 41 ஆயிரம் ஹெக்டேர். இதில் இதுவரை 42,500 ஹெக்டேரில் நடவு நடைபெற்றுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்சி தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 ஆயிரம், திருவாரூர் மாவட்டத்தில் 3 ஆயிரம், நாகை மாவட்டத்தில் 3,500 ஹெக்டேரில் குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறுவை பருவத்தில் கோ-51, ஆடுதுறை-36, அம்பை-16 உள்ளிட்ட 110 நாட்கள் வயதுடைய நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். வேளாண் துறை மூலம் 3 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு 1,115டன் விதைநெல் விநியோகிக்கப்பட்டுள்ளது. தேவையான உரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
வழக்கமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர், திருவாரூர் மாவட்டத்தில் 36 ஆயிரம் ஹெக்டேர், நாகை மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் என 1.11 லட்சம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு குறித்த நேரத்தில் அணைதிறக்கப்பட்டதால், 3 மாவட்டங்களில் ஏறத்தாழ 1.27 லட்சம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி நடைபெறும் என்றும், இந்த ஆண்டு உணவு உற்பத்தியும் கணிசமான அளவுக்கு அதிகரிக்கும் என வேளாண் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT