Published : 18 May 2014 11:38 AM
Last Updated : 18 May 2014 11:38 AM

திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தியை முனைந்து நடத்தும் முன்னணிக் கலைஞர்கள்

திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகளின் ஜெயந்தி விழா, முன்னணிக் கலைஞர்களின் முனைப்போடு கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக நடந்துவருவதாக விழாவை நடத்தும் ஸ்ரீ காஞ்சி காமகோடிபீட கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் சேவா சமிதி தெரிவித்துள்ளது.

கடந்த 11-05-14 நாளிதழில் `திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தியை புறக்கணிக்கும் முன்னணிக் கலைஞர்கள்’ என்னும் தலைப்பில் செய்திக் கட்டுரை வந்திருந்தது. அதை மறுத்து சமிதியின் தலைவர் மடிப்பாக்கம் சுவாமிநாதன், பொதுச்செயலரும் மிருதங்க கலைஞருமான திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

கர்நாடக இசைக்குப் பெருமை சேர்த்த மும்மூர்த்திகள் என போற்றி வணங்கப்படும் ஸ்ரீ சியாமா சாஸ்திரி, ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகியோர் பிறந்த ஸ்தலமான திருவாரூரில், அவர்களுடைய ஜெயந்தி விழா கடந்த நான்கு ஆண்டுகளாக வெகு விமரிசையாக ஒருவாரகாலத்துக்கு ஸ்ரீ காஞ்சி காமகோடிபீட கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் சேவா சமிதி அமைப்பினரால் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வருடமும், இந்த விழாவில் கர்நாடக இசை உலகின் புகழ்பெற்ற கலைஞர்களான மேண்டலின் ஸ்ரீநிவாஸ், பம்பாய் சகோதரிகள், டி.எம்.கிருஷ்ணா, ப்ரியா சகோதரிகள், ஜெயந்தி குமரேஷ், நெய்வேலி சந்தானகோபாலன், சிக்கல் குருசரண் உள்ளிட்ட ஏராளமான முன்னணிக் கலைஞர்கள் தாங்களாகவே முன்வந்து, எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இரண்டு மூன்று நாள்கள் தங்கியிருந்து விழாவை நடத்திச் சென்றனர்.

தவில் மற்றும் நாதஸ்வர வித்வான்களும் பெருமளவில் வந்து சிறப்பித்தனர். சங்கீத வித்வான்கள் எல்லோரும் மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளை அர்ப்பணிப்பு உணர்வோடு உலகம் முழுவதும் பரப்பிவருகின்றனர். அதற்கு ராயல்டி தருவது என்ற கேள்வியே எழவில்லை. முன்னணிக் கலைஞர் களின் முனைப்போடு ஜெயந்தி விழா கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக நடந்துவருகிறது.

இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x