Published : 27 Jul 2020 09:31 PM
Last Updated : 27 Jul 2020 09:31 PM
ஆம்பூர் அருகே இணையத் தொடர்பு சரிவரக் கிடைக்காததால் வனப்பகுதியை நோக்கி, கிராம இளைஞர்கள் கூட்டம், கூட்டமாகப் படையெடுகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சிக்கு உட்பட்ட சுட்டக்குண்டா மலையோர கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உயர்கல்வி படித்த இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் சென்னை, பெங்களூரு, மைசூரு போன்ற முக்கிய நகரங்களில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் உள்படப் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அதேநேரத்தில் படித்து வரும் இளைஞர்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா நோய்ப் பரவல் காரணமாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், பல்வேறு நிறுவனங்கள், அவரவர் வீடுகளில் இருந்தே இணைய வழியில் பணிகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளன. அதன்படி இளைஞர்களும் தங்களுடைய வீடுகளில் இருந்தே பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவர்களுக்கும் தற்போது இணைய வழியில் வகுப்புகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு வீட்டிலிருந்தே இணைய வழியில் பணி செய்யும் இளைஞர்கள், இணைய வழியில் கல்வி கற்கும் மாணவர்கள் இணையத் தொடர்பு கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். செல்போன்களில் இணையத் தொடர்பு கிடைக்காததால் இளைஞர்களும், மாணவர்களும் சுட்டக்குண்டா அருகே உள்ள மூலை பஜார் வனப்பகுதிக்கு செல்கின்றனர்.
பகல் நேரங்களில் அப்பகுதியில் ஒன்று சேரும் இளைஞர்கள், இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் அச்சப்பட்டு வீடுகளுக்குச் சென்று விடுன்றனர். அதேபோல தற்போது அப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதாலும் சரிவர இணையத் தொடர்பு கிடைக்காமல் அலுவலகப் பணிகளுக்கும், கல்வி கற்பதற்கும் பெரும் இடையூறாக உள்ளதாகப் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ள காட்டுவெங்கடாபுரம், மத்தூர்கொல்லை பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவ மாணவிகளும் இதேபோன்று இணைய வழி தொடர்பு கிடைக்காமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். மேலும், மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி மற்றும் கவுண்டன்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள்களும் இணையத் தொடர்புகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே இணைய வழித் தொடர்பு கிடைக்காத பகுதிகளில் செல்போன் டவரை நிறுவினால் நீண்ட நாட்களாக நிலவிவரும் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஆம்பூரில் இணையத் தொடர்பு சரிவர கிடைக்காததால் வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள இளைஞர்கள், மாணவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT