Published : 27 Jul 2020 11:25 AM
Last Updated : 27 Jul 2020 11:25 AM
லாபகரமாக அரசை நிர்வகிக்க முடியவில்லை என்றால் அதைச் சரிசெய்ய வழிகளைக் கண்டறிய வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் சிறு உதவியை உங்களின் நிர்வாகத்திறமை இன்மையால் நிறுத்தி விடாதீர்கள். விவசாயிகளை வஞ்சித்த தேசங்களின் நிலை என்ன என்பதை சரித்திரம் படித்திருந்தால் புரிந்திருக்கும் என மத்திய அரசைக் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
''உலகமே பசுமை விவசாயத்தை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழக விவசாயிகளை 8 வழிச்சாலை, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன், கொள்முதல் விலை, கடன் பிரச்சினை, மின்சாரச் சட்டத்திருத்த மசோதா - 2020 என போராடிக் கொண்டேயிருக்கும் நிலையில் வைத்திருப்பது யார் தவறு?
விவசாயிகளுக்கு எதிராக புது சட்டத் திருத்தங்கள் வருகிறது என கவலையும், பயமும் அவர்களிடம் அதிகம் இருக்கிறது. வெற்று நிலத்தை விளைநிலமாக்கி, உணவும், உடையும், பொருளாதாரத்தின் அடித்தளத்தையும் கட்டமைக்கும் விவசாயிகள்தான் நம் பலம், நலம், எதிர்காலம் எல்லாம். அதை நாம் பல முறை உறுதிபடுத்திக் கொண்டே இருக்கிறோம்.
மின்சாரச் சட்டத்திருத்த மசோதா - 2020, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தைக் குறிவைக்கிறது. பல்லாண்டு போராட்டங்களுக்குப் பின் விளைவிப்பவர்களுக்கு கிடைத்திருக்கும் உதவி இலவச மின்சாரம். கடந்த 4 வருடங்களாக புதிய இணைப்புகளை வழங்காமல், தட்கல் முறையில் மட்டுமே 4 லட்சம் ரூபாய் கட்டி, புதிய இணைப்பு எடுக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மூலப்பொருட்கள் விலை உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, நிலையில்லாக் கொள்முதல் விலை என ஏற்கெனவே பலமுனைகளில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் மேல் இந்தச் சுமையையும் ஏற்றத் துடிக்கிறது இந்த அரசு.
லாபகரமாக அரசை நிர்வகிக்க முடியவில்லை என்றால் அதைச் சரிசெய்ய வழிகளைக் கண்டறிய வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் சிறு உதவியை உங்களின் நிர்வாகத்திறமை இன்மையால் நிறுத்தி விடாதீர்கள். விவசாயிகளை வஞ்சித்த தேசங்களின் நிலை என்ன என்பதை சரித்திரம் படித்திருந்தால் புரிந்திருக்கும்.
விளைவிப்பவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அதிகப்படுத்தாமல், அவர்களைச் சிரமத்தில் ஆழ்த்தும் மின்சாரச் சட்டத்திருத்த மசோதா - 2020ஐ திரும்பப் பெற வேண்டும். பெயரளவில் பாதிப்புகள் வராது என அறிவிக்காமல் அதை அரசு உத்தரவாகச் செயல்படுத்த வேண்டும்.
பொருள் ஈட்டும் உங்கள் போட்டியில் விவசாயிகளைப் பகடைக்காய் ஆக்காதீர்கள். விவசாயிகளுக்காக, அவர்களது உரிமையைப் பாதுகாக்க, எம் குரலும் ஓயாது ஒலிக்கும்".
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT