Published : 27 Jul 2020 07:39 AM
Last Updated : 27 Jul 2020 07:39 AM

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாளர் பற்றாக்குறையால் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை இல்லையென புகார்

திருப்போரூர்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கரோனா தடுப்பு மருத்துவ முகாம்களுக்கு அனுப்பப்படுவதால், ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டு கர்ப்பிணிகள், தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு மாதாந்திர சிகிச்சைகள் முறையாக அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 28ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் 36 செயல்படுகின்றன. மேற்கண்ட 2 மாவட்டங்களிலும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி,பாதிப்புள்ள நபர்கள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவ முகாம்களில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்புனர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகள், தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகளுக்குமாதாந்திர மருத்துவ பரிசோதனைகள் முறையாக செய்யப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கர்ப்பிணிகள், தாய்மார்கள் கூறியதாவது:

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம், உப்பு, சர்க்கரையின் அளவு உள்ளிட்டவை ஒவ்வொரு மாதமும் அவசியம் பரிசோதித்து மருத்துவரின் ஆலோசனையுடன் உரிய மருந்துகளை வழங்க வேண்டும். தற்போது, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றால் பணியாளர் இல்லை; சிறப்பு முகாம் சென்றுள்ளனர் என்று கூறி திருப்பி அனுப்புகின்றனர்.

இதனால், மேற்கண்ட மருத்துவப் பரிசோதனைகளுக்காக வட்டார மருத்துவமனை மற்றும் தலைமை மருத்துவமனைக்கு கர்ப்பிணிகள் சென்றால், ‘உங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதித்துக் கொள்ளுங்கள்’ என அறிவுறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். இதனால், கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பழனி கூறியதாவது: மருத்துவமனைகளில் பணிபுரியும் ஆய்வக நுட்புனர்கள் கரோனா தொற்று பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதால், மேற்கண்ட பணிக்குஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது.எனினும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு தடையின்றி சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவ ஆய்வுக் கூடங்களில் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் ஆய்வகதொழில்நுட்புனர்கள் நியமிக்கப்பட்டு பிரதி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x