Published : 26 Jul 2020 06:07 PM
Last Updated : 26 Jul 2020 06:07 PM
கோவையில் பொற்கொல்லர்களிடம் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பரிசோதனை மேற்கொள்ளவும் 40 பேர் கொண்ட 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சிப் பகுதியில் செயல்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தங்க நகைப் பட்டறைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களிடையே கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பரிசோதனைகளை மேற்கொள்ளவும், கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம், கோவை தங்க நகை வியாபாரிகள் சங்கம், கோவை ஒருங்கிணைந்த பொற்கொல்லர்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
இதையொட்டி, தலா 5 பேர் கொண்ட 8 குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுவினருக்குப் பாதுகாப்பு உடை, முகக்கவசங்கள், கையுறைகள், சானிடைசர், உடல் வெப்பநிலையைக் கண்டறியும் கருவிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அக்குழுவினர் இடையர்வீதி, சலீவன் வீதி, சாமி ஐயர் புது வீதி, பொன்னையராஜபுரம், செல்வபுரம், அசோக்நகர், பெரியகடைவீதி, கருப்ப கவுண்டர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தங்க நகைப் பட்டறைகள் மற்றும் பொற்கொல்லர்களின் வீடுகளுக்குச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், வெப்பநிலை பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.
இந்தப் பரிசோதனையை கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையர் மகேஷ் இன்று (ஜூலை 26) தொடங்கி வைத்தார். கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பி.முத்துவெங்கட்ராம், நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.சபரிநாத், ஒருங்கிணைந்த பொற்கொல்லர்கள் கூட்டமைப்பு தலைவர் ரகுநாத் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து, கோவை தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பி.முத்துவெங்கட்ராம் கூறும்போது, "கோவையில் தங்க நகை தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர் நடத்தும் பரிசோதனையில் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி இருப்பவர்கள் கண்டறியப்பட்டால், மாநகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்து, உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT