Published : 26 Jul 2020 05:49 PM
Last Updated : 26 Jul 2020 05:49 PM
கோவையில் மத்திய அரசின் உணவு தானிய சேமிப்புக் கிடங்கிலிருந்து வெளிவரும் செல் பூச்சிகளால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே, செல் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.
கோவை பீளமேடு காந்தி மாநகர் பகுதியில் மத்திய அரசின் உணவு தானிய சேமிப்புக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் பல வருடங்களாக இருப்பு வைக்கப்பட்டுள்ள தானியங்களால் செல் பூச்சிகள் உற்பத்தியாகி, கிடங்கிலிருந்து வெளியேறி, அக்கம்பக்கத்தில் குடியிருப்போருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகின்றன.
இதுகுறித்து, திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினருமான நா.கார்த்திக் கூறும்போது, "மத்திய அரசின் உணவு தானிய சேமிப்புக் கிடங்கு அருகில் இருக்கும் முருகன் நகர், ஸ்ரீராம் நகர் பகுதி மக்கள் செல் பூச்சிகளால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
குடியிருப்புப் பகுதிக்குப் பறந்து வரும் செல் பூச்சிகள் கடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இரவு நேரங்களில் தூக்கமின்றித் தவிக்கின்றனர். மளிகைக் கடை, பேக்கரிகளில் குடிநீரில் பூச்சிகள் மொய்க்கின்றன. உணவுகளில் இந்தப் பூச்சிகள் விழுவதால், வீடுகளில் உணவுப் பொருட்களைக்கூட வைக்க முடியவில்லை. மேலும், கிடங்கிலிருந்து வெளிவரும் பூச்சிகளால், சுற்றுப்புறச் சூழலும், சுகாதாரமும் பாதிக்கிறது.
எனவே, கிடங்கிலிருந்து பூச்சிகள் வெளியேறாத வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கையாள வேண்டும் இது தொடர்பாக தானியக் கிடங்கின் அதிகாரிகளிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பூச்சிகளைக் கட்டுப்படுத்த நிரந்தர, நவீன முறையிலான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT