Published : 26 Jul 2020 04:45 PM
Last Updated : 26 Jul 2020 04:45 PM
4 ஆண்டுகளாகத் தவறு செய்யும் கிரண்பேடியின் மனநிலையை மாற்ற கடவுளிடம் வேண்டுகிறேன் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் இன்று (ஜூலை 26) கூறியதாவது:
"புதுச்சேரியில் எம்எல்ஏ ஒருவருக்குக் கரோனா தொற்று வந்துள்ளது. இதனால் நாளை எம்எல்ஏக்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். விதிகளின்படி 5 நாட்களுக்குப் பிறகுதான் பரிசோதனை செய்ய வேண்டும். இதனால் எம்எல்ஏக்களுக்கு வரும் 29 ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்வதுதான் நல்லது.
தினமும் 130, 140 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் கரோனா தொற்றால் தினமும் குறைந்தபட்சம் 200 பேர் வீதம் பாதிக்கப்படுவார்கள். இதுபோல் பாதிப்பு ஏற்பட்டால் மிகவும் கடினமாக இருக்கும். உடனே நமக்கு 500 படுக்கைகள் தேவைப்படுகிறது என முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். இதற்கு ஏற்பாடு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியைப் பொறுத்தவரை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் கண்டிப்பாக 6 ஆயிரம் பேருக்கு மேல் கரோனா வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனாமில் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை நான் ஏனாம் செல்கிறேன். நாளை மறுநாள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசியல் கட்சியினர் மற்றும் வணிகர்களின் கருத்துகளைக் கேட்க உள்ளேன். கிழக்கு கோதாவரியில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் ஏனாமில் ஒரு உயர்நிலைப் பள்ளியை கரோனா மருத்துவமனையாக மாற்றியுள்ளோம். வரும் காலத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பாரம்பரியக் கட்டிடங்களைக் கரோனா மருத்துவமனைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் குறைந்தபட்சம் 2,,000 படுக்கைகள் தேவை. இதனால் தனியார் உணவகங்களுக்கு முதல்வர் சென்று பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
இதேபோல், நாளை அல்லது நாளை மறுநாள் பள்ளிக் கல்வி இயக்குநர், உயர்கல்வி இயக்குநர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு அமைத்து, எத்தனை விடுதிகள் உள்ளன, எத்தனை படுக்கைகள் உள்ளன, எத்தனை கழிவறைகள் உள்ளன என ஆய்வு செய்ய உள்ளனர். அதேபோல், உணவகத்தை நாம் எடுத்துக் கொண்டால் அங்கு எத்தனை படுக்கைகளைப் போட முடியும் என்று பார்க்க வேண்டும்.
மேலும், திருமண மண்டபங்களில் படுக்கைகள் ஏற்பாடு செய்தால் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் நியமிக்க முடியும் என முதல்வரிடம் விளக்கிக் கூறியுள்னேன். மற்ற மாநிலங்களில் பொதுமக்களே ஊரடங்கை அமல்படுத்துங்கள் எனக் கூறுகின்றனர். பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலம் நாளை பேசுவார். அதன் பிறகு முதல்வர் முடிவு எடுப்பார். கரோனாவுக்கென்று தனியாக நிதி ஒதுக்கிக் கொடுத்தால் உடனே தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்க முடியும்.
குறைந்தபட்சம் 5 அல்லது 6 மாதங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுகிறது. தற்போது வரை 1,102 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஒரு மாதத்தில் 6,000 பேர் பாதிக்கப்பட்டால் 6,000 படுக்கைகள் தேவைப்படும். ஒரு வாரத்துக்குள் 200 படுக்கைகள் அதிகப்படுத்துமாறு சுகாதாரத்துறைச் செயலாளரிடம் அறிவுறுத்தியுள்ளேன்.
வாரத்துக்கு ஒரு முறை முழு ஊரடங்கு அமல்படுத்தினால் கரோனா தொற்று குறைய வாய்ப்புள்ளது. ஆனால், வணிகர்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என முதல்வரிம் கூறுகின்றனர். வியாபாரத்தை மட்டும் பார்த்தால் வாழ்க்கைக்குப் பாதிப்பு வரும். எனவே, வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சிந்தித்துப் பார்த்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கரோனா வந்த பிறகு பெரிய மாநிலங்களில் கூட 2 நாட்களில் பட்ஜெட் போட்டுள்ளனர். ஆனால், சிறிய மாநிலமான புதுச்சேரியில் பட்ஜெட் போட 6 நாட்கள் ஆகியுள்ளது. சட்டப்பேரவைக்குள் கிரண்பேடி நுழைந்த பிறகு எம்எல்ஏ ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று சாலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. முன்கூட்டியே சட்டப்பேரவையை நடத்தி முடித்திருந்தால் இப்பிரச்சினையே வந்திருக்காது.
கடந்த ஒரு வாரத்தில் இத்தனை கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டேன் என ஆளுநர் தெரிவிக்கிறார். ஆனால், இன்று வந்த கோப்புக்கு இன்றே ஏன் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். கோப்புக்கு உடனே ஒப்புதல் அளித்தால் மக்களுக்கு விரைவாகத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும். தேவையுள்ள கோப்புகளுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துவிட்டு அதனைத் தெரிவித்துள்ளார். ஆனால், நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு எப்போது ஒப்புதல் அளிப்பார்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமுக்கு எந்தத் திட்டமும் வரக்கூடாது என்ற மனநிலையில் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். இந்த ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது. அடுத்து ஆட்சிக்கு வருவோமா என்று தெரியாது. இந்நிலையில், மக்களுக்கான கோப்புகளுக்கு கிரண்பேடி ஒப்புதல் அளிக்க வேண்டும். கிரண்பேடி கடந்த 4 ஆண்டுகளாக செய்த தவறுக்காக அவரது மனநிலையை கடவுள் மாற்ற வேண்டும் என புதுச்சேரி மக்களுக்காக வேண்டுகிறேன்.
கிரண்பேடி கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாளை ஆளுநர் இருக்கையில் இருந்து சென்றுவிட்டால் கோப்புகளுக்குப் பச்சை நிறத்தில் கையெழுத்திட வாய்ப்பு இருக்காது. வாழ்க்கையில் இதுபோன்ற வாய்ப்பு இனி கிடைக்காது. எனவே, மக்களுக்காக கிரண்பேடி கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்".
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT