Published : 26 Jul 2020 08:40 AM
Last Updated : 26 Jul 2020 08:40 AM

கரோனா தொற்றால் உயிரிழப்பு; செய்யாறு அருகே மூதாட்டி உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு

திருவண்ணாமலை

செய்யாறு அருகே கரோனா தொற்றால் உயிரிழந்த மூதாட்டி யின் உடலை அடக்கம் செய்ய கிராமத்தைச் சேர்ந்த ஒரு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த குண்ணவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவர், காய்ச்சல் காரணமாக செய்யாறு அரசு மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கடந்த 21-ம் தேதிதிருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், சிகிச்சை பலனின்றி மூதாட்டி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இதையடுத்து, மூதாட்டியின் உடலை குண்ணவாக்கம் கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்தது.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதற்கு, மயானம் அருகே வசிக்கும் ஒரு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்த செய்யாறு வட்டாட்சியர் மூர்த்தி, காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடல் தகனம்

அப்போது, அவர்கள் குடியிருப்புப் பகுதி அருகே உள்ள மயானத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த மூதாட்டி உடல் நல்லடக்கம் செய்தால், தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, செய்யாறில் உள்ள எரிவாயு தகன மேடையில், மூதாட்டியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x