Published : 26 Jul 2020 08:38 AM
Last Updated : 26 Jul 2020 08:38 AM

`பருத்தி வீரன்' திரைப்பட புகழ் நாட்டுப்புற பாடகி லட்சுமியம்மாள் வறுமையுடன் போராட்டம்: ஓய்வூதியம் வழங்க அரசு கருணை காட்டுமா?

ஒழுகும் வீட்டில் வசிக்கும் நாட்டுப்புற பாடகி லட்சுமியம்மாள்.

மதுரை

மழை பெய்தால் ஒழுகும் வீடு, தான் பெற்ற விருதுகளைக் கூட வைக்க இடமின்றி அன்றாட உணவுக்கே வழியில்லாமல் ‘பருத்தி வீரன்' திரைப்பட புகழ் நாட்டுப்புறப் பாடகி காரியாபட்டி லட்சுமியம்மாள் வறுமையில் வாடி வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் காரியா பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமியம் மாள். ஆரம்பத்தில் பரவை முனி யம்மாளும், இவரும் சேர்ந்துதான் தென்மாவட்டங்களில் நடக்கும் கச்சேரிகளில் நாட்டுப்புற பாடல் களை பாடி வந்தனர்.

தூள் படம் மூலம் பரவை முனியம்மாள் சினிமாவில் புகழ் பெற்ற பிறகு, லட்சுமியம்மாள் மட்டும் தனியாக கச்சேரி செய்து வந்தார். 2007-ம் ஆண்டு, இயக்கு நர் அமீர் மூலம் அவருக்கு ‘பருத் திவீரன்’ படத்தில் நாட்டுப்புறப் பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது.

அந்த ஒரே பாடல் மூலம் இவரும் புகழ் பெற்றார். ஆனால் இவருக்கு உடல் நிலை ஒத்துழைக்கவில்லை. 2016-ம் ஆண்டு ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதால் லட்சுமியம்மாளால் முன்புபோல் பாட முடியவில்லை.

அதனால், 6 படங்களோடு அவ ரது சினிமா ஆசைக்கும், கச்சேரிக ளுக்கும் முடிவு ஏற்பட்டது. தனி யார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு உடல் நலம் தேறினாலும், இவரது குரல் வளத்தையும், ஆரோக்கியத்தை யும் மீட்க முடியவில்லை. சம்பா தித்த பணமும் மருத்துவச் சிகிச்சைக்கே செலவானது.

கடந்த சில ஆண்டாக ஒரு கால் ஊனத்துடன் வருவாய் இன்றி அவர் வீட்டிலேயே முடங்கி உள்ளார். கூலி வேலை செய்யும் மகன்களாலும் அவருக்கு உதவ முடியாத சூழல் உள்ளது. தற்போது தான் பெற்ற விருதுகளை வைக்கக் கூட இடமில்லாமல் ஒழுகும் வீட்டில் அன்றாட சாப்பாட்டுக்கே சிரமப்பட்டு வருகிறார்.

தற்போது கரோனா ஊரடங் கால் அவரது மகன்களும் வேலை யில்லாமல், வருவாய் இழந் துள்ளனர். இதனால் மருந்து, மாத்திரை வாங்கக் கூட காசில்லாத நிலையில் சிரமப்படுகிறார் 70 வயதான முதுபெரும் நாட்டுப்புறக் கலைஞர் லட்சுமியம்மாள்.

இதுபற்றி மகன் வீரகுமார் கூறுகையில், ‘‘நாங்களும் அம்மா வுக்கு மாற்றுத்திறனாளி ஒய்வூதி யத்துக்கு பலமுறை எழுதி போட் டோம். பதில் இல்லை. நலிவடைந்த நாட்டுப்புற கலைஞருக்கான உதவித்தொகையும் கிடைக்க வில்லை’’ என்றார்.

லட்சுமியம்மாள் கூறுகையில், ‘‘20 வயசுல பாட ஆரம்பிச்சேன். கும்மி பாட்டு, ஒப்பாரி, தாலாட்டு, தெம்மாங்கு, பக்தி பாட்டு என எல்லா பாடல்களையும் ரவுண்டு கட்டி பாடுவேன். வானொலி, சினிமா என பல வாய்ப்பு கிடைச்சாலும், தொடர்ந்து கத்தி பாடுனதால் ரத்தக் குழாயில அடைப்பு ஏற்பட்டது. எவ்வளவோ செலவு பண்ணியும் குணமாகல. என் புள்ளங்க சாப்பாடு போடுவாங்க. மருந்து, மாத்திரை வாங்கவாவது அரசு உதவித் தொகை கொடுத்தா நல்லா இருக்கும்’’ என்றார்.

சக நாட்டுப்புறக் கலைஞர்கள் ‘‘அரசு இவருக்கு கலைமாமணி விருதோடு, உதவித் தொகையும் வழங்கி கவுரவிக்க வேண்டும்’’ என வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x