Published : 25 Jul 2020 08:52 PM
Last Updated : 25 Jul 2020 08:52 PM
பக்ரீத் பண்டிகையை ஆகஸ்ட் 01 அன்று கொண்டாட உள்ள நிலையில் ஆடுகளின் விலை உயர்ந்து வருகிறது.
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் ஆகஸ்ட் 01 அன்று கொண்டாடப்பட உள்ளது. இபுராஹீம் நபி தனது மகனை, இறைவனுக்காக பலி (குர்பானி) கொடுப்பதாகக் கனவு கண்டு, அதனை நிறைவேற்ற முற்பட்டபோது, இறைவன் அதைத் தடுத்து நிறுத்தி ஆட்டுக் குட்டியை குர்பானி (பலி) கொடுக்கச் செய்ததாக குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
இதைப் பின்பற்றும் வகையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக குர்பானி கொடுத்து வருகின்றனர்.
பண்டிகையான பக்ரீத் பண்டிகை நாளில் முஸ்லிம்களுக்கு குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை அறுத்து குர்பானி கொடுத்து அதன் இறைச்சிகளை உறவினர்களுக்கு மற்றும் அண்டை வீட்டார் மற்றும் ஏழைகளுக்கு கொடுத்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு குர்பானிக்காக கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து ஆடுகள் கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள். ஆனால் கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடு வியாபாரம் செய்யும் தாவூத் கான் கூறியதாவது,
பக்ரீத் பண்டிகைகளின் போது ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகனங்களில் கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களிலிருந்து செம்மறி ஆடுகளை வியாபாரிகள் வாங்கி வந்து சந்தைகளிலும், பள்ளி வாசல்கள் அருகாமையிலும் விற்பனை செய்வது உண்டு.
உள்ளுர் இறைச்சி வியாபாரிகள் அருகாமையில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிருந்து வெள்ளாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
ஆனால் தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளினால் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் உள்ளூர்களில் கிடைக்கும் ஆடுகளையே விற்பனை செய்து வருகிறோம்.
ரூ. 6 ஆயிரம் வரையிலும் விற்பனையாகிக் கொண்டிருந்த 10 கிலோ எடை கொண்ட ஆட்டு கிடா தற்போது ரூ. 8 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT