Published : 25 Jul 2020 03:14 PM
Last Updated : 25 Jul 2020 03:14 PM
ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, கி.வீரமணி இன்று (ஜூலை 25) வெளியிட்ட அறிக்கை:
"கடந்த ஜூன் 19 அன்று 'விடுதலை'யில் 'குடும்பங்களை, இளைஞர்களை நாசப்படுத்தும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும்' என்ற அடிப்படையில் முக்கிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தோம்.
இந்தச் சூதாட்டத்தில் தொடக்கத்தில் லாபம், வருவாய் வருவதுபோல போக்குக் காட்டி, அடுத்த கட்டத்தில் சொத்தையே இழக்கும் அளவுக்கு இந்த ஆன்லைன் சூதாட்டப் போதையையும், இதனால் பல குடும்பங்கள் சீரழியும் என்பதையும் சுட்டிக்காட்டி, இந்தச் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தி இருந்தோம்.
அதற்கு இப்பொழுது சென்னை உயர் நீதிமன்றத்தின்மூலம் பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது, வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியதும்கூட!
'தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ரம்மி, பாஸியன், லியோவேகாஸ், ஸ்பார்டன்போக்கர், போக்கர் டங்கல், பாக்கெட் 52, ஜீனியஸ் கேசினோ போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் களான்கள் போல முளைத்துக் கொண்டு இருக்கின்றன.
இவை அனைத்தும் வேலை இல்லாமல் வீட்டிலிருக்கும் இளைஞர்களைத் தூண்டும் வகையில் செயல்படுகின்றன. அதாவது வீட்டில் இருந்தபடியே எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்களைத் தூண்டுகின்றன.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுச் சூதாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களால், அவர்களின் குடும்பத்தில் நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
தெலங்கானா மாநில அரசு, தெலங்கானா விளையாட்டுச் சட்டத்தை 2017 ஆம் ஆண்டிலேயே திருத்தம் செய்து பணம் செலுத்தி ஆன்லைனில் விளையாட முடியாத அளவுக்கு ஆக்கிவிட்டது. ஒழுக்கத்துக்காகவும், உடலை சீராக வைக்கவும் விளையாட்டுகளை வகைப்படுத்தியுள்ளோம்.
ஆனால், தற்போது வளர்ந்துவரும் ஆன்லைன் விளையாட்டுகளை சமாளிக்க ஒழுங்குமுறை அமைப்பைக் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்' என்று உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி விரிவாகக் கூறி, ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜூன் 19 ஆம் தேதி 'விடுதலை'யில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருக்குறளிலிருந்து ஒரு குறளை எடுத்துக்காட்டியிருந்தோம்.
'இழந்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்' (குறள் 940)
துன்பம் அடையுந்தோறும் உயிரின்மேல் ஆவலே உண்டாகும். அதுபோலவே, சூதாட் டத்தில் பொருள் இழப்பு ஏற்படுந்தோறும் அந்தச் சூதாட்டத்தை விடாது ஆடும் ஆவலே மிகும் என்ற குறளை, இப்பொழுது குடியைக் கெடுக்கும் இணையதள ரம்மி சூதாட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.
காலத்தால் அளிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இந்த ஆன்லைன் சூதாட்ட விபரீதத்தை உடனடியாகத் தடை செய்து இளைஞர்களையும், அவர்களைச் சார்ந்த குடும்பங்களையும், நல்லொழுக்கத்தையும் காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம், வலியுறுத்துகிறோம்!"
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment