Published : 25 Jul 2020 02:36 PM
Last Updated : 25 Jul 2020 02:36 PM

கரோனா அறிகுறி தெரிந்தால் உடனடியாக சிகிச்சைக்கு வந்தால் நுரையீரலுக்கு பரவுவதை தடுக்கலாம்:  அமைச்சர் விஜயபாஸ்கர் 

சென்னை

கரோனா நோய்த்தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நோய்க்கான அறிகுறி தெரிந்தால் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை மையத்துக்கு வந்தால் நுரையீரலுக்கு நோய் பரவுவதை தடுக்கமுடியும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னையில் பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

“ஓமந்தூரார் மருத்துவமனையில் படுக்கை வசதி 750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் 200 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2174 கர்ப்பிணிகளில் 1517 கர்ப்பிணிகள் குணமடைந்துள்ளனர். பிரசவ காலத்தில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். குழந்தைகள் பிறந்த 210 நாட்களுக்குள் தொற்றை குணப்படுத்தியுள்ளோம். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஜூலை 1 அன்று 42 சதவீதமாக இருந்த நோய் பாதிப்பு தற்போது 22.5 சதவீதமாக குறைந்துள்ளது. வீட்டுத்தனிமையைப் பொறுத்தவரை சென்னையில் மட்டுமே அவர்கள் கேட்டுக்கொள்வதன் அடிப்படையில் அவர்கள் வீட்டில் உள்ள நிலைமையை ஆராய்ந்து அனுமதிக்கிறோம்.

மற்ற மாவட்டங்களில் அனுமதிப்பதில்லை. சென்னையில் மிக அதிக அளவில் தொற்று அதிகரித்தபோது அனுமதித்தோம். தற்போது அதிக அளவில் பரிசோதனை செய்வதை அரசு ஊக்குவித்து வருகிறது. பொதுமக்கள் லேசான காய்ச்சல் மாதிரி இருக்கிறது, உடல் வலிப்பதுபோல் உள்ளது, லேசாக மூச்சு விட சிரமமாக உள்ளது போல் தெரிகிறது என்றால் ஆரம்பத்திலேயே சிகிச்சைக்கு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆரம்பத்தில் சிகிச்சைக்கு வந்தால் அது நுரையீரலுக்கு பரவாமல் தடுக்கலாம்.

பத்து நாளில் நோய்க்குறையும் என முதல்வர் தெரிவித்தது தமிழகத்தில் அளிக்கப்படும் சிகிச்சை, எடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக நோயைக்கட்டுப்படுத்த முடியும். தொடர்ந்து உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நோயிலிருந்து மீள்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நோயை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்கிற நம்பிக்கை அடிப்படையில் முதல்வர் தெரிவித்துள்ள கருத்து அது.

நாம் அதிகப்படியான சோதனை நடத்தப்படுவதன் மூலம் நோய் அறிகுறி உள்ளவர்களை உடனடியாக சிகிச்சை மையத்துக்கு அழைத்து வருவதன் மூலம் நோய்ப்பரவலை தடுக்க முடியும்”.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x