Published : 25 Jul 2020 12:53 PM
Last Updated : 25 Jul 2020 12:53 PM
புதுச்சேரியில் இன்று புதிதாக 139 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒருவர், ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர், ஏனாமில் ஒருவர் என 3 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கையும் ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (ஜூலை 25) கூறும்போது, "புதுச்சேரி மாநிலத்தில் 775 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது புதுச்சேரியில் 113 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் 23 பேர் என மொத்தம் 139 பேருக்கு (17.9 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் 72 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 40 பேர் ஜிப்மரிலும், ஒருவர் 'கோவிட் கேர் சென்ட'ரிலும், காரைக்காலில் 3 பேரும், ஏனாமில் 23 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒருவர், ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
வாழைக்குளத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு இருதய பாதிப்பு இருந்தது. அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல் வில்லியனூர் கணுவாப்பேட்டையைச் சேர்ந்த 75 வயது முதியவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இதேபோல் ஏனாமைச் சேர்ந்த 75 வயது முதியவர் காக்கிநாடா அரசு மருத்துவமனையில் இருதய பிரச்சினை சம்பந்தமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்குக் கரோனா பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் இறப்பு எண்ணிக்க 38 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 514 பேர், ஜிப்மரில் 288 பேர், 'கோவிட் கேர் சென்ட'ரில் 150 பேர், காரைக்காலில் 42 பேர், ஏனாமில் 59 பேர், மாஹேவில் 2 பேர் என மாநிலத்தில் மொத்தம் 1,055 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்று கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 32 பேர், ஜிப்மரில் 19 பேர், 'கோவிட் கேர் சென்ட'ரில் 14 பேர், காரைக்காலில் 13 பேர் என மொத்தம் 78 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,561 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 ஆயிரத்து 305 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 31 ஆயிரத்து 142 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. இன்னும் 353 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன.
நாடு முழுவதும் தினமும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கூட தொற்று அதே வேகத்தில் பரவுகிறது. நானும், துறை செயலாளர், இயக்குநர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினோம். அதில் தேவையான மருத்துவமனை, படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 35 நாட்களுக்கு 10 ஆயிரம் பேருக்குத் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று ஜிப்மர் இயக்குநர், நம்முடைய மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர். இது சம்பந்தமாக நேற்று முதல்வரிடம் பேசியுள்ளோம்.
தேவையான உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பொதுமக்கள் தரப்பில் இருந்து ஒத்துழைப்பு தேவை. தொற்றுப் பரவல் வேகமாக இருந்தால் கூட பலரும் சாலையில் சுற்றுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதும் சிரமமாக உள்ளது.
இன்று என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சட்டப்பேரவை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
பேரவை கூட்டத்தில் பங்கேற்ற அந்த எம்எல்ஏ மற்ற எம்எல்ஏக்களை சந்தித்துள்ளார். ஆகவே, எந்தெந்த எம்எல்ஏக்கள் அவருடன் தொடர்பில் இருந்தார்களோ அவர்களும், குடும்பத்தினரும் 5-வது நாள் கரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல், பத்திரிகையாளர்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு பெரிய பாதிப்பு இருக்கும் என்று சொல்லி வருகிறேன். அதுபோலவே தொற்று அதிகளவில் பரவி வருகிறது. சுகாதாரத்துறை தரப்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆகவே பொதுமக்கள் கரோனாவை தடுக்க முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT