Published : 25 Jul 2020 12:36 PM
Last Updated : 25 Jul 2020 12:36 PM
ஆகஸ்டு 1 அன்று நாடுமுழுவதும் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாட உள்ள நிலையில் பொதுவெளி, பள்ளிவாசல்களில் தொழுகை, குர்பானி கொடுப்பது உள்ளிட்டவைகள் குறித்து அரசு உரிய அறிவிப்பை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு முஸ்லீம் லீக் வலியுறுத்தியுள்ளது.
நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
பக்ரீத் பண்டிகை ஒவ்வொரு வருடமும் அரேபிய மாதம் துல்ஹஜ் பத்தாம் நாள் கொண்டாடப்படுகிறது.இஸ்லாமியர்களின் முக்கியமான ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ் பயணம் மேற்கொள்வது. இந்த புனிதப் பயணக் கடமைகளில் கடைசியானது அல்லாவிற்கு பலியிடுவதாகும்.
பெருநாள் தொழுகை நடைப்பெற்ற பின்னர் வசதி படைத்தவர்கள் அதாவது எல்லா செலவுகளும் போகையில் ரூ.5 ஆயிரம் ரொக்கம் இருந்தாலே அவர்கள் கண்டிப்பாக குர்பானி கொடுக்க வேண்டும் என்கிறது ஷரிஅத். உற்றார், உறவினர், ஏழைகளை இந்நாளிலே மறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த குர்பானி கொடுக்கும் நிகழ்வு அமைந்திருக்கிறது.
பக்ரீத் நாளில்தான், ‘இயன்றதை இல்லாதோர்க்கு கொடுத்து உதவுக’ என்ற கோட்பாடு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான வணக்க வழிபாடு என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இந்தாண்டின் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் குறித்து தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் அதிகாரபூர்வமாக கடந்த 22-ம் தேதியன்று அறிவித்துள்ளார். அதன்படி ”ஜூலை மாதம் 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஹஜ் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால், வியாழக்கிழமை ஜூலை 23 ஆம் தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால் பக்ரீத் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படும்” என்று அறிவித்துள்ளார்.
அதன்படி தமிழகத்தில் பக்ரீத் கொண்டாட்டத்திற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளநிலையில், பக்ரீத் பண்டிகையின் போது ஹஜ் பெருநாள் தொழுகையை திடல் மற்றும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் நிறைவேற்றுவது வழக்கம், அந்த வகையில் இந்தாண்டு ஹஜ் பெருநாள் தொழுகை தொடர்பான எந்த அறிவிப்பு அரசிடம் இருந்து இதுநாள் வரை வரவில்லை. கடந்த ரமலான் பண்டிகையின் போது, கரோனா தொற்று அதிகரித்து வருவதால் வீடுகளிலேயே இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
தற்போது தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிப்பு என்பது இருந்தாலும், ஊரக பகுதிகளில் 10 ஆயிரம் ரூபாய் கீழ் வருவாய் உள்ள வழிபாட்டு தலங்கள் வழிபாட நடத்த தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் எப்படி கொண்டாடுவது என்பது குறித்து இஸ்லாமிய அமைப்புகளுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி ஹஜ் திருநாள் வழிகாட்டு நெறிமுறைகளை விரைந்து வெளியிட்டு, இஸ்லாமிய மக்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...