Published : 25 Jul 2020 12:14 PM
Last Updated : 25 Jul 2020 12:14 PM
தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் நியாய விலைக் கடை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் நேற்று முதல் வேலை நிறுத்தம் செய்கின்றனர். இதனால் விவசாயப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என ஏ.கே.எஸ்.விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“தமிழக விவசாயிகளின் மிகப்பெரிய ஆதாரமாக இருப்பது தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களாகும். அதன் முக்கியத்துவங்களை அறிந்திருந்ததால்தான் மண்ணின் மைந்தர் கலைஞர், திமுக ஆட்சியின்போது தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களின் அதிகார வரம்புகள் அனைத்தையும் விவசாயத்திற்கு ஆதரவாகவும் விவசாயிகளுக்குப் பயன்தரும் வகையிலும் அமைத்துத் தந்திருந்தார்.
ஆனால் தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு, விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் கைவிட்டுவிட்டு மக்களை வஞ்சித்து வருகிறது. ஏற்கனவே கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களில், தங்களின் கட்சி நிர்வாகிகளை ஜனநாயக விரோதச் செயல்களின் மூலம் கூட்டுறவுச் சங்கங்களில் நிர்வாகிகளாக அறிவித்துப் பொறுப்புக்களில் அமர வைத்திருக்கும் அதிமுக அரசு, அதன்மூலம் விவசாயத்திற்கு எந்தவித உதவிகளையும் மேற்கொள்ள முடியாமல் முடக்கிப் போட்டு இருக்கிறது.
கூட்டுறவுத் துறை மூலம் குடும்ப அட்டை வைத்திருந்தாலே கடன் பெற்றுக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பைப் போகிற போக்கில் அறிவித்து விட்டு, அப்படி கூட்டுறவுச் சங்கங்களைக் கடனுக்கு அணுகும் விவசாயிகளை, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கேலிச் சிரிப்புடன் திருப்பி அனுப்புவதுடன், அப்படி எந்த அறிவிப்பும் தங்களுக்கு வரவில்லை என்றும் கூறிக் கடன் வழங்க மறுத்து வருகிறார்கள்.
இந்த நிலைகளையும் மீறிக் கடன் பெறும் கிராம விவசாயிகளுக்குத் தாங்கள் பெறும் கடன் தொகையினை அந்தந்தச் சங்கங்களின் மூலமாகப் பெற முடியாமல் நகர்ப்புறங்களுக்குச் சென்று மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மூலமே பெறவேண்டும் என்கிற புதிய வழிகாட்டு நெறிமுறையை அறிவித்து விவசாயிகளை மேலும் துன்புறுத்தி வருகிறது அதிமுக அரசு.
மேலும், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் நியாய விலைக் கடை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் ஆளுகின்ற அதிமுக அரசு எந்தச் சலுகைகளையும் அறிவிக்காமல் காலம்தாழ்த்தி வருகிறது. இப்படித் தொழிலாளர் விரோத - விவசாய விரோத எடப்பாடி அரசை எதிர்த்துத் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்க செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களும் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 24 (நேற்று)முதல் தமிழக அரசுக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதன்படி தமிழகம் முழுவதும் 200 நகரக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் 4300 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் என 4500 கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் செயலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் காரணமாகத் தமிழகம் முழுவதும் சுமார் 3000 கோடி ரூபாய்வரை பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேட்டூர் அணையைத் திறந்துவிடுதல் மட்டுமே விவசாயத்திற்குப் போதுமானது என்கிற சிந்தனையில் இருக்கும் அதிமுக அரசு, திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடைப்பகுதிக்குச் சென்று சேர்ந்ததா? வேளாண்மைத்துறை மூலம் குறுவைத் தொகுப்புத் திட்டம் தரப்படுகிறதா? வேளாண்மைத் துறையால் தரமான விதைநெல் தரப்படுகிறதா? உரம், பூச்சிக்கொல்லி போன்ற இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு இருக்கிறதா? என்பதையெல்லாம் இந்த அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருவதால் விவசாயிகள் மிகுந்த சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
தற்போது தொடங்கி இருக்கும் இந்த வேலைநிறுத்தத்தால் விவசாயக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் பாதிக்கப்படுவதோடு, குறுவை சம்பா சாகுபடி வேலைகள் நடக்கும் இந்த நேரத்தில், விவசாயத்திற்குத் தேவையான உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் வழங்குவதும் பாதிக்கப்படும். மேலும், பொதுவிநியோகத் திட்டங்களும் முற்றிலும் முடங்கிவிடும்.
பல கூட்டுறவுச் சங்கங்களில் இயங்கிவரும் பொதுச்சேவை மையங்களும் இயங்காததால் ஊரடங்கு நேரத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் வெகுவாக பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே எல்லாப் பிரச்சனைகளிலும் அலட்சியம் காட்டுவதைப்போல விவசாயப் பிரச்சனைகளிலும் அதிமுக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டாமல், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கூட்டுறவுச் சங்க பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பேச்சுவார்த்தை நடத்தி, அவைகளைச் சுமூகமாகத் தீர்த்து வைப்பதன் மூலம் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பாதிக்கப்பட்ட விவசாயப் பணிகளைத் தொடர போர்க்கால அடிப்படையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்”.
இவ்வாறு விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment