Published : 25 Jul 2020 11:10 AM
Last Updated : 25 Jul 2020 11:10 AM

தென்காசி அருகே விவசாயி மரணம்: உயர் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடுக; குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்; வைகோ

வைகோ: கோப்புப்படம்

சென்னை

விவசாயி அணைக்கரை முத்து மரணம் குறித்து உயர் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும், மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூலை 25) வெளியிட்ட அறிக்கை:

"தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து தம்முடைய நிலக்கடலை, காய்கறித் தோட்டத்தில் அனுமதியின்றி மின் வேலி அமைத்து இருந்ததாகக் கூறி, கடந்த 22 ஆம் தேதி நள்ளிரவு சிவசைலம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு வன அலுவலர்கள் மற்றும் ஊழியர்களால் அவர் தாக்கப்பட்டதாகவும், தொடர்ந்து நள்ளிரவுக்குப் பின்னர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு, கூடுதல் மருத்துவ உதவிக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கிடைக்கப் பெறும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில்தான் ஓரளவு விவசாயம் நடைபெறுகிறது. அதுவும் காட்டுப் பன்றி போன்ற விலங்குகள் வேளாண்மை நிலத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் துயரமாகும். இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை.

வனவிலங்குகளால் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு பேரிடர் இழப்பாகக் கருதி நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று நான் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தபோதும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

மலையடிவார விவசாயிகளின் வேதனையைச் சொல்லி மாளாது. இத்தகையச் சூழ்நிலையில் விவசாயி அணைக்கரை முத்து தமது வேளாண் பயிர்களைப் பாதுகாக்க மின்வேலி அமைத்துள்ளது மாபாதகச் செயல் அல்ல. அதனால் எவருக்கும் உயிரிழப்பு ஏற்படப்போவதும் இல்லை. அதைத் தவிர மலையடிவார விவசாயிகளுக்கு தங்கள் வேளாண்மையைப் பாதுகாக்க வேறு வழி இல்லை.

இதற்காக நள்ளிரவு 11 மணிக்கு வீடு புகுந்து, விவசாயி அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் அவசர அவசியம் வனத்துறைக்கு ஏன் வந்தது? தென்காசி, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லும் தகவலைக் குடும்பத்தினருக்குத் தெரிவிக்காதது ஏன்?

சுமார் 75 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த விவசாயியை வனத்துறையினர் கடுமையாகத் தாக்கியதன் விளைவாகவே அவர் இறந்துவிட்டார் என அவரது குடும்பத்தினரும், அனைத்து அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்பினரும் கடந்த மூன்று நாட்களாகக் குரல் எழுப்பி வருகின்றனர். கடையம் வாகைக்குளம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

வனத்துறையினர் தாக்கியதன் விளைவாகவே விவசாயி அணைக்கரை முத்து இறந்திருக்கிறார் என்பது சந்தர்ப்ப சாட்சியங்கள் மூலம் தெரிய வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்து, விசாரணை நடத்த வேண்டும்.

நிபுணத்துவம் பெற்ற மூன்று மருத்துவக் குழுவினரால் விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை மறு உடற்கூறு ஆய்வு செய்வதுடன், அதனை வீடியோ எடுத்திட வேண்டும். பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்திட உத்தரவிட வேண்டும்.

வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவரை அநியாயமாக இழந்துவிட்ட அக்குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் என்று மதிமுகவின் சார்பில் வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x