Last Updated : 24 Jul, 2020 08:37 PM

 

Published : 24 Jul 2020 08:37 PM
Last Updated : 24 Jul 2020 08:37 PM

கீழடி அகழாய்வில் கட்டுமானத்திற்கு பயன்படுத்திய வட்ட வடிவ துளைகள் கண்டுபிடிப்பு

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் கட்டுமானத்திற்கு பயன்படுத்திய வட்ட வடிவ துளைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி பிப்.19-ம் தேதி நடந்து வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.

அவற்றில் செங்கல் கட்டுமானம், விலங்கு எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன், எடைக் கற்கள், நீள வடிவ பச்சை நிறp பாசிகள் மற்றும் 5 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் கீழடியில் வளைவான செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே 6 அடி ஆழத்தில் வளைவான அமைப்பில் 6 சிறிய வட்ட வடிவ துளைகள் கண்டறியப்பட்டுள்ளன.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வசிப்பிடங்கள் பெரும்பாலும் வட்ட வடிவில் அமைந்திருக்க வாய்ப்புண்டு என்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

மூங்கில் கழிகள், மரக்குச்சிகளை வட்ட வடிவில் நட்டு அதன் மேல், கூரை வேய்ந்துள்ளனர். இதற்கு ஆதாரமாக கடந்த 5-ம் கட்ட அகழாய்வில் மேற்கூரை அமைப்பை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்திருந்தனர்.

தற்போது 6-ம் கட்ட அகழாய்வில் கீழடியில் மொத்தம் 12 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் குழிகளில் அகழாய்வு மேற்கொள்ள நில அளவைப்பணிகள் நடந்து வருகின்றன.

செப்டம்பரில் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் கீழடியில் அகழாய்வு பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x