Published : 24 Jul 2020 08:34 PM
Last Updated : 24 Jul 2020 08:34 PM

விவசாயத்தைப் பாதிக்கும் 4 சட்டங்கள்; விவசாயிகள் சங்கம் நடத்தும் கருப்புக் கொடி போராட்டம்: ஸ்டாலின் ஆதரவு

சென்னை

அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு நடத்தும் கறுப்புச் சட்டங்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கம், கருப்புக் கொடிப் போராட்டத்துக்கு திமுக முழு ஆதரவளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“உலகப் பேரிடரான கரோனா கால ஊரடங்கில் மக்கள் நலனைக் காப்பதற்குப் பதில், மக்களின் நலன்களுக்கு எதிராகவும் - மாநில உரிமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு.

குறிப்பாக, நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் 4 சட்டங்களை நடைமுறைப்படுத்திட பாஜக அரசு தீவிரமாகச் செயல்படுகிறது. மின்சார சட்டத் திருத்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம் 2020, விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம் 2020.

இந்த 4 சட்டங்களும் பெயரளவில் நன்மை செய்வது போலத் தெரிந்தாலும், உள்ளுக்குள் இருக்கும் அம்சங்கள், வேளாண்மைக்கு வேட்டு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் தன்மை கொண்டவை.

இதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு, பொதுமக்களையும் பாதிக்கும் இந்தக் கறுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிரான போராட்டக் களத்தைக் கட்டி அமைத்துள்ளது.

அவசரச் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறும் வகையில் தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்துவதுடன், ஜூலை 27 அன்று அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவித்திடவும் கோரிக்கை விடுத்துள்ளது.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இந்தக் கையெழுத்து இயக்கம் மற்றும் கருப்புக் கொடிப் போராட்டத்திற்குத் திமுக, தனது முழு ஆதரவினை வழங்குகிறது. கறுப்புச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் நலனும் பாதுகாக்கப்படுவதற்கு திமுக துணை நிற்கும்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x