Published : 24 Jul 2020 08:29 PM
Last Updated : 24 Jul 2020 08:29 PM
தமிழகத்தில் தூய்மைப் பணிகள் சரிவர நடைபெறாததே கரோனா வைரஸ் பரவலுக்கு முக்கியக் காரணம் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் இன்று (ஜூலை 24) மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. ஆனால், இது தொடர்பான அறிவிப்புகள் வெளிப்படைத் தன்மையுடன் இல்லாமல், உள்நோக்கம் கொண்டதாக இருக்கின்றன. கரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக இருந்தும், அதை அரசு ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
கரோனா வைரஸ் குறித்த அறிவிப்புகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததாலேயே, பரவல் அதிகமாகி, பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகத்தில் கரோனாவுக்காக நடைபெறும் தூய்மைப் பணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதைக் காண முடிகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பணியில் உள்ள ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் குறித்து நாமக்கல் எம்.பி. ஆய்வு செய்ததில், 190 பேர் பணியில் உள்ளதாக பதிவேட்டில் இருந்ததுள்ளது. ஆனால் 45 பேர் மட்டுமே பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. அதாவது, நான்கில் ஒரு பங்கு ஊழியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, தூய்மைப் பணி சரிவர நடைபெறாததே தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணமாகும்.
தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அரசு கூறும் நிலையில், திருச்செங்கோட்டைப்போல ஒவ்வொறு பகுதியிலும் குறைந்த அளவு பணியாளர்களே பணிபுரிகின்றனர். இந்த முறைகேடுகளால் சுமார் 1,400 கோடி வரை மக்கள் வரிப் பணம் வீணாகிறது. இது தொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்தப் பணியாளர்களின் பணி நேரத்தை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய வேண்டும்.
தமிழக அரசு காவல் துறையினரின் செயல்பாடுகளைச் சீரமைக்க வேண்டும். பொதுமக்களின் நலனில் அக்கறையுடனும், கவனத்துடனும் செயல்படுமாறு காவல் துறைக்கு அறிவுறுத்த வேண்டும். தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது, மக்களைத் திசை மாற்றும் முயற்சி. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கந்த சஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட்டது தொடர்பாகவோ, கோயில்கள் தாக்கப்பட்டது தொடர்பாகவோ இதுவரை தமிழக முதல்வர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. கோவையில் செயல்படும் தொழிற் கூடங்களில் அபராதத்துடன் மின் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை மின்வாரியம் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே சிரமத்துக்குள்ளாகியுள்ள தொழில் துறையினரை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கக் கூடாது. அவர்களிடம் வசூலித்த அபராதத் தொகையை திரும்ப வழங்க வேண்டும்''.
இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT