Published : 24 Jul 2020 06:32 PM
Last Updated : 24 Jul 2020 06:32 PM
கோவை மாவட்டத்தில் நாளை (ஜூலை 25) மாலை 5 மணி முதல் வரும் 27-ம் தேதி காலை 6 மணி வரை எவ்விதமான தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (ஜூலை 24) அவர் கூறியதாவது:
"தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கடந்த 5, 12, 19-ம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், நாளை (ஜூலை 25) மாலை 5 மணி முதல், வரும் திங்கள்கிழமை (ஜூலை 27) காலை 6 மணி வரை எவ்விதத் தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
மருத்துவம், பால் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும். ஊரடங்கை மீறி, வெளியில் நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உழவர் சந்தை, மார்க்கெட், மளிகைக் கடைகள், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், இறைச்சிக் கடைகள், டாஸ்மாக் கடைகள், வர்த்தக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட எவ்வித அமைப்புகளும் இயங்காது. கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்".
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT