Published : 24 Jul 2020 06:19 PM
Last Updated : 24 Jul 2020 06:19 PM
இ-பாஸ் இல்லாமல் கோவை மாவட்டத்துக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜூலை 24) கூறியதாவது:
"மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாட்களைத் தவிர, வெளி ஆட்களை அனுமதிக்கக் கூடாது. அனைரும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைப் பின்பற்றி பணியாற்ற வேண்டும். பணிக்கு வருவோருக்குத் தினமும் தெர்மல் ஸ்கேனிங் செய்ய வேண்டும். நிறுவனங்களின் நுழைவுவாயிலில் சோப்பு ஆயில் மற்றும் சானிடைசர் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
அன்னூர், எஸ்.எஸ்.குளம், சூலூர், பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் அறிகுறிகளுடன் இருப்பவர்களைத் தனிமைப்படுத்தி, பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருவோர், முறையாக இ-பாஸ் பெற்றுத்தான் வரவேண்டும். மேலும், அவர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். நோய்த் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இ-பாஸ் இல்லாமல் கோவை மாவட்டத்துக்குள் நுழைவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளி மாநிலத் தொழிலாளர்களை கேரளாவுக்குச் செல்வதாகக் கூறி இ-பாஸ் பெற்று, கோவை மாவட்டத்துக்கு அழைத்து வந்து, இங்குள்ள தொழில் நிறுவனங்களில் பயன்படுத்துவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக சில தனியார் ஏஜென்ட்டுகளும் செயல்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்தத் தொழில் நிறுவனங்கள் மூடப்படும்.
மாவட்டத்தின் எல்லைகளில் உள்ள அனைத்துச் சோதனைச்சாவடிகளிலும் வாகனங்கள் தீவிர கண்காணிப்புக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் வருவோருக்குச் சோதனைச்சாவடியிலே ஆரம்பக்கட்டப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது".
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT