Published : 24 Jul 2020 03:52 PM
Last Updated : 24 Jul 2020 03:52 PM
தமிழ்நாடு முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் மாநிலம் முழுவதும் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் 'மிரர் அக்கவுண்ட்' தொடங்கி அதன்மூலமே தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற நடைமுறையால் சங்க உறுப்பினர்கள் ஒன்றுக்கும் அதிகமான முறை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அலைக்கழிக்கபடுவதுடன், கடனைப் பெறுவதிலும் காலதாமதம் நேரிடுவதால் ஏற்கெனவே இருந்ததுபோல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலமே பணப் பட்டுவாடா செய்ய அனுமதிக்க வேண்டும்.
நியாயவிலைக் கடை பணியாளர்கள் உட்பட அனைத்து கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கும் புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்" என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் போராட்டத்தை அவர்கள் இன்று (ஜூலை 24) தொடங்கியுள்ளனர்.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் 147 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் 350 பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், இந்த கடன் சங்கங்கள் மூடப்பட்டுள்ளதுடன், ரூ. 250 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவரும், சங்கத்தின் தற்போதைய திருச்சி மாவட்டச் செயலாளருமான ஆர்.துரைக்கண்ணு கூறும்போது, "தமிழ்நாடு முழுவதும் 200 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 4,300 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் என மொத்தம் 4,500 கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் செயலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.
சங்க உறுப்பினர்களின் நலனை முன்னிறுத்தியே இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு கடன் சங்கங்களில் சுமார் ரூ.3,000 கோடி முதல் ரூ.4,000 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு எங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். அதுவரை எங்களது வேலைநிறுத்தம் தொடரும். எங்களது போராட்டம் தொடர்ந்தால் விவசாயிகள், சுய உதவிக் குழுக்கள் கடன் கிடைக்காமல் பாதிக்கப்படுவர்.
குறிப்பாக, சம்பா சாகுபடி நடைபெற்று வரும் இந்தக் காலத்தில் விவசாயிகளுக்கு உர விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும், பொது விநியோகத் திட்டம் உட்பட மக்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்பு நேரிடும்" என்றார்.
அதேபோன்று, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள சுமார் 200 பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் விவசாயிகளுக்கு தேவையான உரம், பூச்சி மருந்து மற்றும் அனைத்து விதமான கடன்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது இ-சேவை மையமும் முடங்கியுள்ளதால் மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஜெ.ஞானசேகர்/பெ.பாரதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT