Published : 24 Jul 2020 03:41 PM
Last Updated : 24 Jul 2020 03:41 PM

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் அழகாகும் மதுரை: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பாரம்பரிய பஜார், டூரிஸம் பிளாசா

மதுரை 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிறைவேற்றப்படும் மீனாட்சியம்மன் கோயில் மல்டி லெவல் பார்க்கிங், குன்னத்தூர் சத்திரம், ஜான்சிராணி பூங்கா, பாரம்பரிய பஜார் மற்றும் டூரிஸம் பிளாசா போன்றவை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உள்ளது.

தென்னகத்தின் ஏதேன்ஸ், கோயில் நகரம், பண்பாட்டு நகரம், பன்னெடுங்காலம் பாண்டியர் விரும்பி வீற்றிருந்த தலைநகரம் எனவும் மதுரையின் பாரம்பரியம் இன்றளவும் போற்றப்படுகிறது.

மீனாட்சியம்மன் கோயிலுக்கு மட்டும் புகழ்பெற்றது என்றில்லாமல் அழகர் மலை, யானை மலை, நாகமலை, பசுமலை, திருப்பரங்குன்று போன்ற மலையரண்களால் சூழப்பட்டுள்ள இந்த நகரம், தமிழகத்தின் மிகத் தொன்மையான நகரமாக போற்றப்படுகிறது.

தற்போது இந்த நகரின் தொன்மைக்கும், பாரம்பரியத்திற்கும் மேலும் மகுடம் சூட்டும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பழைய மதுரையின் கட்டமைப்பை மாற்றம் செய்யாமல் அதில் புதுமையான திட்டங்களை மாநகராட்சி செயல்படுத்துகிறது.

மதுரையின் சிறப்பைக் கூறும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் மட்டுமில்லாது திருமலைநாயக்கர் மஹால், குன்னத்தூர் சத்திரம், மாரியம்மன் தெப்பக்குளம், வைகை ஆறு, பெரியார் பஸ்நிலையம் உள்ளிட்ட பழைய மதுரை நகர எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் ரூ.1012 கோடியில் 14 சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. டமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் ஊருக்குச் சென்றதால் இடையில் இந்தத் திட்டங்கள் கிடப்பில் கிடந்தது.

ஆனால், கடந்த ஜூன் முதல் உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டு தற்போது இந்தத் திட்டங்கள் தடைபடாமல் நடக்கிறது. 50 சதவீதம் திட்டங்கள் இறுதிக்கட்ட கட்டுமானப்பணியில் உள்ளன.

அதில் முக்கியமானவை, குன்னத்தூர் சத்திரம், மீனாட்சியம்மன் கோயில் மல்டி லெவல் பார்க்கிங், குன்னத்தூர் சத்திரம், ஜான்சிராணி பூங்கா, சுற்றுலாப்பயணிகள் தங்கும்விடுதி (Tourism Plazza), பாரம்பரிய பஜார்கள் (Heritage bazaar). இதில், ஜான்சி ராணி பூங்கா, குன்னத்தூர் சத்திரம், டூரிஸம் பிளாசா, பாரம்பரிய பஜார், மல்டி லெவல் கார் பார்க்கிங் போன்றவை பார்ப்போரைக் கவரும் வகையில் பிரமாண்ட கட்டிட அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் மதுரை வந்தால் அவர்கள் மதுரையின் பாரம்பரிய பொருட்களை வாங்குவதற்கு ஜான்சி ராணி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய பஜாரில் மதுரையின் அனைத்து சிறப்பு வாய்ந்த பாரம்பரிய பொருட்களும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தங்கி மதுரையை சுற்றிப்பார்க்க மீனாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயே பெரியார் பஸ்நிலையம் பகுதியில் டூரிஸம் பிளாசா (சுற்றுலாப்பயணிகள் தங்கும் விடுதி) கட்டப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளுக்கான வழிகாட்டி மையமும் இந்த கட்டிடத்தில் செயல்பட உள்ளது.

முழுவீச்சில் நடக்கும் இந்தத் திட்டங்களின் கட்டுமானப்பணிகள் பெயிண்டிங் அடித்து நிறைவடைந்தால் மதுரையின் பாரம்பரியத்தை போற்றும் இந்த இடங்கள் நிச்சயமாக சுற்றுலாப்பயணிகளின் மனதை கொள்ளை கொள்ளும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x