Published : 24 Jul 2020 02:23 PM
Last Updated : 24 Jul 2020 02:23 PM
கரோனா சிகிச்சையில் குணமடைந்து பணிக்குத் திரும்பிய காவல் இணை ஆணையர் மற்றும் 68 போலீஸாரை சென்னை பெருநகர காவல் ஆணையர் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்து, மூலிகைகள் அடங்கிய நவரசத் தேநீர் வழங்கினார்.
சென்னை பெருநகர காவல், இணை ஆணையர் (தலைமையிடம்) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி இன்று (24.7.2020) பணிக்குத் திரும்னார்.
தலைமையிட இணை ஆணையரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இன்று சந்தித்து உடல் நலம் குறித்துக் கேட்டறிந்தார். பூரண குணமடைந்து பணிக்குத் திரும்பியதற்காக அவருக்குப் பூங்கொத்து வழங்கி வாழ்த்துத் தெரிவித்து, பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.
மேலும், சென்னை பெருநகரில் காவல் நிலையங்களில் பணிபுரிந்தபோது, கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து, மருத்துவர் ஆலோசனைப்படி இன்று (24.7.2020) பணிக்குத் திரும்பிய பல்வேறு பொறுப்பில் உள்ள 68 போலீஸாருக்கும் சென்னை காவல் ஆணையர் வாழ்த்துத் தெரிவித்து, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
மேலும், பல்வேறு மூலிகைகள் அடங்கிய நவரசத் தேநீரை காவல் ஆணையர், போலீஸாருக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள் என்.கண்ணன், (போக்குவரத்து), அமல்ராஜ், (தலைமையிடம்), தேன்மொழி, (மத்திய குற்றப்பிரிவு), இணை ஆணையர்கள் பாலகிருஷ்ணன் (வடக்கு மண்டலம்), சுதாகர் (கிழக்கு மண்டலம்), ஏ.ஜி.பாபு, (தெற்கு மண்டலம்), ஜெயகௌரி,(போக்குவரத்து/ வடக்கு), லஷ்மி, (போக்குவரத்து /தெற்கு), துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT