Published : 24 Jul 2020 12:36 PM
Last Updated : 24 Jul 2020 12:36 PM
அனைத்துச் சவால்களையும் புதுச்சேரி அரசு எதிர்கொண்டு நிலையான வளர்ச்சியை எதிர்வரும் காலங்களில் எட்டும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
ஆளுநர் உரையின்போது இரு அமைச்சர்கள், 3 ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் அவையில் இல்லாமல் புறக்கணித்தனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த 20-ம் தேதி சட்டப்பேரவையில் உரையாற்றி அன்றைய தினம் பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பட்ஜெட்டுக்கு அனுமதி பெறவில்லை என்று கிரண்பேடி குற்றம் சாட்டியதுடன், உரையாற்றவும் பேரவைக்கு வரவில்லை.
அன்றைய தினம் பட்ஜெட் தாக்கலானது. இச்சூழலில் பட்ஜெட் தாக்கல் செய்ய கிரண்பேடி அனுமதி தந்த கடிதத்தை சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி காட்டினார். அதைத்தொடர்ந்து, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தந்து பேரவைக்கு உரையாற்ற வருவதாக கிரண்பேடி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் முழு ஏற்பாடுகள் இன்று (ஜூலை 24) செய்யப்பட்டிருந்தன. கிரண்பேடி பேரவைக்கு வரும் நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பேரவைக்கு முன்பாகச் சென்று, புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்குக் காவித் துணி போர்த்திய உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா நிவாரணப் பணிகளை சரிவரச் செய்யவில்லை என்று மறுபக்கம் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா அங்கு வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினார்.
அதைத்தொடர்ந்து, இன்று சட்டப்பேரவைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வந்தார். சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்து அவரை வரவேற்று பேரவைக்குள் அழைத்து வந்தார். பேரவைக்குள் உறுப்பினர்கள் எழுந்து நின்று வரவேற்க, அனைவரையும் வணங்கியபடி கிரண்பேடி வந்தார்.
ஆனால், முதல்வர் நாராயணசாமியை அவர் பார்க்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமியைப் பார்த்தபடி சபாநாயகர் இருக்கைக்குச் சென்று அமர்ந்தார். அதையடுத்து, அரசு கொறடா அனந்தராமன், முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமி நாராயணன், கருப்புச் சட்டை அணிந்து வந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயமூர்த்தி ஆகியோர் அவையிலிருந்து வெளியே சென்றுவிட்டனர்.
அமைச்சர் நமச்சிவாயம் சட்டப்பேரவைக்கு வரவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது அறையிலேயே அமர்ந்திருந்தார். பேரவைக்குள் வரவில்லை.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சட்டப்பேரவையில் சுமார் ஒரு மணி நேரம் பத்து நிமிடம் உரையாற்றினார். அப்போது அவர், "புதுச்சேரி அரசு கடந்த நிதியாண்டில் 93 விழுக்காடு செலவு செய்துள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.360 கோடி வராமல் போனதே செலவினம் குறைந்ததற்குக் காரணம்.
கரோனா காலத்தில் முதல்வர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் களப்பணியில் தங்களை ஈடுபடுத்தி அயராமல் உழைப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரைப் பணயம் வைத்துக் கடினமான பணியில் ஈடுபடுவோருக்குப் பாராட்டுகள்.
அனைத்துச் சவால்களையும் புதுச்சேரி அரசு எதிர்கொண்டு நிலையான வளர்ச்சியை எதிர் வரும் காலங்களில் எட்டும் என்று உறுதியாக நம்புகிறேன். எதிர்பாராத கரோனா நெருக்கடியில் இருந்து மீண்டும் அரசு வெற்றி நடைபோடும்" என்று தெரிவித்தார்.
ஆளுநர் உரையை நிறைவு செய்தவுடன், அதிமுக எம்எல்ஏ அன்பழகன் எழுந்து, "20-ம் தேதி வராமல் இன்று வந்தது ஏன்? இது தொடர்பாக முதல்வர் விளக்க வேண்டும்" எனக் கேள்வி எழுப்பினார். முதல்வர் அவர்களை அமரச் சொன்னார்.
பேரவையில் கிரண்பேடி இருக்கும்போதே, அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்புச் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT