Published : 24 Jul 2020 12:03 PM
Last Updated : 24 Jul 2020 12:03 PM
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு உபரகணங்கள் பாதுகாப்பு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அருகிலிருந்த வார்டுகளில் இருந்த நோயாளிகள் சிறிது நேரம் திறந்தவெளியில் தங்கவைக்கப்பட்டனர்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கும் அறையின் அருகே துப்புரவுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் ரசாயண திரவங்கள் வைத்திருக்கும் அறை உள்ளது.
இந்த அறையில் இருந்து இன்று காலை திடீரென அதிகமான புகை வந்ததைக் கண்ட பணியாளர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து ஆண்டிப்பட்டி மற்றும் தேனியைச் சேர்ந்த 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீ எரிந்த அறையை திறந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ரசாயணங்கள் எரிந்ததால் அவற்றை அணைப்பதில் தீயணைப்புத் துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் தீ அணைக்கப்பட்டாலும் அதில் இருந்து வந்த புகை அடங்கவில்லை.
ரசாயணங்கள் எரிந்து அதன்மூலம் வந்த புகையால் தீயணைப்புத்துறையினர் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதனையடுத்து அருகில் இருந்த கரோனா சிகிச்சை வார்டின் ஜன்னல் கதவுகள் உடனடியாக அடைக்கப்பட்டது.
இதுதவிர அருகில் இருந்த மற்றொரு நோயாளிகள் வார்டில் இருந்த நோயாளிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு, திறந்தவெளியில் தங்க வைக்கப்பட்டனர். இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கரோனா தனிமைபடுத்தப்பட்ட வார்டு அருகில் ஏற்பட்ட தீ விபத்தால் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT