Published : 23 Jul 2020 09:15 PM
Last Updated : 23 Jul 2020 09:15 PM

குவைத்தில் சிக்கியுள்ள 2,000 தமிழர்களை மீட்கக் கோரி வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

கரோனா காரணமாக குவைத்தில் சிக்கியுள்ள தமிழகத் தொழிலாளர்களை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச் சங்கம் மனுத்தாக்கல் செய்தது. இம்மனு தொடர்பாகப் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து உலகம் முழுவதும் அதன் தாக்கம் அதிகரித்தது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சர்வதேச விமானப் போக்குவரத்து, பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டது.

இதனால் வெளிநாட்டில் பணி நிமித்தமாக, கல்வி கற்க, சுற்றுலா சென்ற இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். ஊரடங்கு தளர்வுக்குப் பின் வந்தே பாரத் திட்டம் மூலம் அவர்களை இந்தியா அழைத்து வருகின்றனர். ஆனால், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் தமிழர்கள் அதிக அளவில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க கோரிக்கை வலுத்து வருகிறது.

இது தொடர்பான வழக்கு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.நாகமுத்து மற்றும் வழக்கறிஞர் ரகுநாத சேதுபதி ஆஜராகினர்.

அவர்கள் தரப்பு வாதத்தில், “குவைத்தில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 2,000 தொழிலாளர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டும். தற்போதைய நிலையில் அவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவம், சுகாதாரமான தங்கும் வசதி செய்து கொடுக்க இந்தியத் தூதரகத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரினர்.

அவர்கள் வாதங்களைப் பதிவு செய்துகொண்ட உச்ச நீதிமன்றம் இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x