Published : 23 Jul 2020 05:59 PM
Last Updated : 23 Jul 2020 05:59 PM
சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு செய்த மேல் முறையீட்டு மனுவை வாபஸ் பெற வலியுறுத்தி, விவசாயிகள் வீடுகளுக்கு முன்பு கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்-சென்னை வழியாக ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் எட்டு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து, திட்டம் நிறைவேற்றிட தேவையான ஆயத்தப்பணிகள் மேற்கொண்டது.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக வருவாய் துறை மேற்கொண்டது. எட்டு வழிச்சாலையால் விளைநிலங்கள், நீர்நிலைகள், மலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால், திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று கூறி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர்.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் திட்டத்தை ரத்து செய்ய வேண்டி மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கான அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய நெடுஞ்சாலைத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல் முறையீட்டு மனுவை வாபஸ் பெற வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இன்று (ஜூலை 23) வீடுகளுக்கு முன்பு கருப்புக் கொடி கட்டியும், விவசாய தோட்டங்களில் கை, கால்களை கட்டிக் கொண்டு, வாயில் கருப்பு துணி கட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் ஜருகுமலை, நிலவாரப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு, மேல் முறையீட்டு மனுவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT