Published : 23 Jul 2020 05:55 PM
Last Updated : 23 Jul 2020 05:55 PM
மாநில திட்டக்குழு உண்மையில் புதுச்சேரியில் கலைக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பி முதல்வர் நாராயணசாமி இதை விளக்க வேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் பட்ஜெட் ஆவணத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, திட்டக்குழுவின் ஒப்புதலைப் பெற கூறினார். மத்திய அரசில் திட்டக்குழு கலைக்கப்பட்டு விட்டதால் புதுச்சேரி மாநில அரசில் திட்டக்குழு இல்லை என அவரிடம் தெரிவித்தோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆளுநர் கேட்டதற்காக ஏற்கெனவே இக்குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்களிடம் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற்று மீண்டும் கோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரி முன்னாள் எம்.பி. ராமதாஸ் இன்று (ஜூலை 23) கூறியதாவது:
"மாநிலத் திட்டக்குழு கலைக்கப்பட்டிருந்தால் மாநில நலனுக்கு எதிராக ஒரு பெரிய தவறை முதல்வர் நாராயணசாமி செய்து இருக்கிறார் என்று அர்த்தம்.
மாநிலத் திட்டக் குழு என்பது நிர்வாக ரீதியாக ஒரு மிகப்பெரிய ஜனநாயக அமைப்பு. இக்குழு மாநிலத்தில் திட்டங்களை வகுத்து புதுச்சேரியில் ஆண்டுத் திட்டம் மற்றும் பட்ஜெட் தயார் செய்து இக்குழு ஒப்புதல் அளித்தபின் தான் வரைவு பட்ஜெட் மத்திய உள்துறை மற்றும் நிதித் துறைக்கு அனுப்பப்படுகிறது.
உதாரணமாக, தமிழகத்தில் திட்டக்குழு இவ்வாண்டு மார்ச் மாதம் 13-ம் நாள் மறுசீரமைக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் பொன்னையன் திட்டக்குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலங்கானா போன்ற பல மாநிலங்களில் எப்போதும் உள்ளது போல மாநிலத் திட்டக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில், உதாரணமாக, உத்தரப்பிரதேசத்தில் மாநில நிதி ஆயோக் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு 2015-ல் திட்டக் குழுவைக் கலைத்தது. புதுச்சேரியில் 2019-ம் ஆண்டு ஜூலை வரை திட்டக்குழுவில் நான்கு ஆண்டு கூட்டங்களில் துணைத் தலைவராக முதல்வர் நாராயணசாமி பதவியேற்றார். 2020-ல் மட்டும் திடீரென்று திட்டக்குழுவை கலைத்து இருக்கிறார். அப்படி என்றால் இக்குழு எப்போது கலைக்கப்பட்டது என்று அரசு இணையதளத்தில் எச்செய்தியும் இல்லை. மத்திய உள்துறைக்கோ, ஆளுநருக்கோ இது தெரியுமா என்ற கேள்வி எழுகிறது.
திட்டக்குழு கலைக்கப்பட்டிருந்தால் அதில் உறுப்பினர்கள் இல்லை. அப்படி இருக்கும்போது முன்னாள் உறுப்பினர்கள் இந்த ஆண்டின் பட்ஜெட்டுக்கு எப்படி ஒப்புதல் கொடுக்க முடியும் என்ற சந்தேகம் உள்ளது. முதல்வர் இதற்கான நோக்கத்தை விளக்க வேண்டும்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT