Published : 23 Jul 2020 05:28 PM
Last Updated : 23 Jul 2020 05:28 PM
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து (65). விவசாயம் செய்து வருகிறார்.
கடையம் அருகே உள்ள இவரது விவசாய நிலத்தைச் சுற்றி மின் வேலி அமைத்திருந்ததாகக் கிடைத்த தகவலின்பேரில், கடையம் வனத்துறையினர் நேற்று இரவு அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், அணைக்கரை முத்துவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
அங்கு அணைக்கரை முத்துவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அணைக்கரை முத்துவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலை 6 மணியளவில் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்துக்கு ஆலங்குளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா வந்தார். அவரது தலைமையில் ஏராளமானோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அணைக்கரை முத்து மரணத்துக்குக் காரணமான வனத்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்தக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
போராட்டம் காரணமாக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேதப் பரிசோதனை முடிவு அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், மற்ற கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறும் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT