Published : 23 Jul 2020 05:23 PM
Last Updated : 23 Jul 2020 05:23 PM
இஎஸ்ஐ மருத்துவனையில் கரோனா வார்டு இல்லாததால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், தொற்று ஏற்படும் தொழிலாளர்களுக்கு அங்கு தனி வார்டு அமைக்க வேண்டும் எனவும் மதுரை மடீட்சியா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மடீட்சியா தலைவர் பா.முருகானந்தம் கூறியதாவது:
தமிழகத்தின் பாரம்பரிய தொழில் நகரங்களில் மதுரை முக்கியமானது. ஆட்டோ மொபைல்ஸ், லைட் இன்ஜினியரிங், உணவு, ஜவுளி மற்றும் ரப்பர் போன்று பல்வேறு தொழில்களை கொண்டிருக்கிறது.
மெதுவாக தகவல் தொழில்நுட்பமும் வளர ஆரம்பித்துள்ளது. ஆனாலும், மதுரையில் இயங்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக மருத்துவமனை மீக நீண்ட காலமாக மேம்படுத்தப்படாமல் உள்ளது. தொழிலாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்த மருத்துவமனை தரம் போதுமானதாக இல்லை.
இந்த மருத்துவமனை மாநில அரசின் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. அதனால், மருத்துவமனை வளர்ச்சி மற்றும் வரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ளது. மாவட்டத்தில் இந்த மருத்துவமனை மூலம் பயன்பெறும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அதனால், இந்த மருத்துவமனை கட்டுப்பாட்டை மாநில அரசிடம் இருந்து தொழிலாளர் காப்பீட்டு கழகமே எடுது்துக் கொண்டு நேரடியாக நிர்வகித்தால் மட்டுமே தொழிலாளர்கள் பயன்பெற முடியும்.
இதன் மூலம் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்த வழிவகுக்கும். மதுரை நகரில் அமைந்துள்ள கப்பலூர், கே.புதூர், உறங்கான்பட்டி, நகரி போன்ற தொழில்பேட்டைகளுக்கு அருகில் தனி இஎஸ்ஐ கிளினிக்குகள் உருவாக்க வேண்டும்.
தற்போது கரோனா வேகமாக பரவும்நிலையில் இஎஸ்ஐ மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நேரடியாக அனுமதிக்கப்படுவதில்லை. அறிகுறி தெரிந்தால் அரசு ராஜாஜி மருத்துமவனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அங்கு ஏற்கெனவே நிறைய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருப்பதால் போதுமான வசதிகள் இல்லை. அதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் பயன்பெறும் வகையில் இஎஸ்ஐ மருத்துவமனையிலே தனி சிகிச்சை கரோனா வார்டு அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment