மதுரை நீதிமன்றம்: கோப்புப்படம்
மதுரை நீதிமன்றம்: கோப்புப்படம்

சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம்: தலைமை காவலர் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் கைதான தலைமை காவலரின் ஜாமீன் மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் ரகுகனேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தலைமை காவலர் முருகன், ஜாமீன் கேட்டு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (ஜூலை 23) நீதிபதி தாண்டவன் முன்பு விசாரணைக்கு வந்தது. முருகன் மற்றும் சிபிஐ வழக்கறிஞர்கள் வீடியோ கான்பரன்ஸில் வாதிட்டனர்.

சிபிஐ தரப்பில் வழக்கு தொடக்க நிலையில் இருப்பதால் முருகனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையேற்று முருகனின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

கரோனா பரிசோதனை

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு சிறையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிறையில் உடல் நலக்குறைவு ஏற்படுவதாக கூறி தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களை விசாரணை நடத்திய சிபிஐ குழுவில் இடம் பெற்றிருந்த இரு அதிகாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே 10 போலீஸாரையும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in