Published : 23 Jul 2020 05:09 PM
Last Updated : 23 Jul 2020 05:09 PM

ஏழு பேர் விடுதலை: உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பின்னர் அரசு உடனடியாக முடிவெடுக்க வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

ஏழு பேர் விடுதலையில் ஆளுநரும், தமிழக அரசும் இதுபற்றிய சீரிய முடிவினை மேலும் தாமதிக்காமல் உடனடியாக எடுக்கவேண்டும் என தி.க. தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தி.க. தலைவர் வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 28 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருக்கும் கைதிகளான - தற்போது ஆயுள் தண்டனைகளை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட எழுவரை விடுதலை செய்ய தமிழக அரசு முதல்வராக ஜெயலலிதா இருந்த போதே எடுத்த முடிவு ஏனோ இன்னமும் செயல்படுத்தப்படாமல் இத்தனை ஆண்டு காலம் அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வருகிறது.

பேரறிவாளன் போன்றவர்களை விசாரித்த காவல்துறை அதிகாரி முதல், இறுதித் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் வரையில் அதில் வழக்கு விசாரணை, நீதி வழங்கியதில் ஏற்பட்ட கோணல்பற்றியும் வெளிப்படையாகவே கூறிவிட்ட பிறகும், உச்சநீதிமன்றமும் அந்த எழுவரை விடுதலை செய்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தி விட்ட பிறகும், தமிழ்நாடு அரசு பரிந்துரைத்து முடிவு எடுத்த கோப்பு, ஆளுநரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்குமேல், கிடப்பில் இருப்பதுபற்றி நேற்று (22.7.2020) சென்னை உயர்நீதிமன்றம் தனது பகிரங்க அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இதன் பிறகும் அந்த ஏழு பேரின் விடுதலை தாமதிக்கப்படலாமா? முதல்வரின் - அமைச்சர்களின் காதுகளில் விழவில்லையா? ‘ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியா?’ என்று தமிழக மக்கள் பேசுவது, இந்த ‘அம்மா அரசின்’ முதல்வரின் - அமைச்சர்களின் காதுகளில் விழவில்லையா? அரசமைப்புச் சட்டப்படி தமிழக அமைச்சரவை முடிவெடுத்து, அந்தப் பரிந்துரை மாநில ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

இரண்டு ஆண்டுகளாக அதன்மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல், அக்கோப்புகள் தேக்கநிலையில் இருப்பதுபற்றி உயர்நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி நேற்று தனது கருத்தினைப் பதிய வைத்திருக்கிறது.

‘‘அரசின் பரிந்துரையை நிராகரிப்பதற்கோ, ஏற்றுக் கொள்வதற்கோ முழு அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. ஆனால், நீண்ட நாள்கள் நிலுவையில் வைத்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசமைப்புப் பதவியில் (Constitutional Posts) உள்ளவர்கள்மீதான நம்பிக்கை அடிப்படையில்தான் அவர்கள் முடிவெடுக்க வேண்டிய விவகாரங்களில் கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை’’ என்பதையும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி அல்லவா? ஆளுநரும், தமிழக அரசும் இதுபற்றிய சீரிய முடிவினை மேலும் தாமதிக்காமல் உடனடியாக எடுக்கவேண்டும். மனிதாபிமானத்தோடு, நீதி கிடைக்கச் செய்யவேண்டியது முக்கியம். அவர்கள் கைக்கெட்டியது - வாய்க்கு எட்டவேண்டாமா?தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி அல்லவா? தமிழக அமைச்சரவை உடனே விரைந்து முடிவெடுக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x