Published : 02 Mar 2014 12:00 AM
Last Updated : 02 Mar 2014 12:00 AM
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஜாபர் சாதிக் தலைமையில் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த அமைப்பு முழுமையாக கலைக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் ‘ஆம் ஆத்மி’ கட்சியில் இணைந்துள்ளனர். தாராபுரத்தில் கட்சி அலுவலகம் திறந்து செயல்படவும் ஆரம்பித்துள்ளனர்.
இதுகுறித்து ஜாபர் சாதிக் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தாராபுரம் நகர பொறுப்பாளர்கள் அனைவருமே இளைய தளபதி மக்கள் இயக்கத்திலிருந்து விலகிவிட்டோம். இளைய தளபதி இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர்கள் சிலர் விஜய்யை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர். அவர்களுக்கு தேவையானதை செய்து தருபவர்களுக்கு மட்டும் இயக்கத்தில் முன்னுரிமை தருகிறார்கள். அங்கு ஜனநாயகம் கிடையாது. இது தொடர்பாக விஜய்க்கும் அவரது தந்தைக்கும் பல முறை தபால் எழுதியும் பயனில்லாமல் போய்விட்டது. இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் ஆனந்த், துணைத் தலைவர் ராஜேந்திரன் இந்த இருவரும் வைத்ததுதான் அங்கு சட்டமாக உள்ளது. விஜய்யும் இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்.
அதேபோல், விஜய்யின் அப்பா சந்திரசேகரோடு நெருக்கமாக இருப்பவர்களும் இயக்கத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். காசு இருப்பவர்கள் மட்டுமே அங்கே காலம் தள்ளமுடியும் என்பதால் நாங்கள் வெளியேறினோம்.
சாமானிய மக்களுக்காக போராடும் ‘ஆம் ஆத்மி’ கட்சியில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி முன்னிலையில் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளோம். இப்போது, மேலும் 13 மாவட்டங்களில் உள்ள விஜய் மன்றப் பொறுப்பாளர்கள் ‘ஆம் ஆத்மி’யில் இணைய எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் அந்த மாவட்டங்களின் பொறுப்பாளர்களும் எங்களைப் போல் மொத்தமாக மன்றங்களை கலைத்துவிட்டு, ‘ஆம் ஆத்மி’யில் இணைவர்’. இவ்வாறு அவர் தெரிவித்தார். இவர்களின் முடிவு குறித்து இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் ஆனந்திடம் பேச முயற்சித்தோம்; முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT